'நம் பாரம்பரியத்தை எந்த நிலையிலும் விட்டுவிட கூடாது'
'நம் பாரம்பரியத்தை எந்த நிலையிலும் விட்டுவிட கூடாது'
ADDED : அக் 05, 2025 01:05 AM

சென்னை:“எந்த நிலையிலும் நம் பாரம்பரியத்தை விட்டுவிடக் கூடாது,” என, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுறுத்தினார்.
சென்னை மடிப்பாக்கத்தில், ஸ்ரீ பிரத்யக் ஷா சாரிடபிள் டிரஸ்ட், கடவாசல் கிருஷ்ணமூர்த்தி அய்யர், சரஸ்வதி சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் காஞ்சி காமகோடி பீட பக்தர்களால் கட்டப்பட்டுள்ள, 'ஸ்ரீ விஷ்ணு பாத ஷ்ராத்த பவனம்' எனும் பித்ருக்களுக்கான வழிபாட்டு கூடத்தை, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று திறந்து வைத்து, பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கினார்.
அவர் பேசியதாவது:
சிவனும், அம்மனும் இணைந்த கோவில்கள் பல உண்டு. ஆனாலும், அம்மனுக்கான தலமாக விளங்குவது காஞ்சிபுரம் தான். இந்த கோவிலின் வழிபாட்டு முறைகளை பின்பற்றவும், காஞ்சி காமகோடி பீடத்தின் தொடர் பக்திநெறி சார்ந்த நடவடிக்கைகளுக்காகவும், பல ஊர்களில் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன.
அதேசமயம், சுவாமிக்கு பக்தர்களும் கைங்கர்யம் செய்யும் வகையில், ஆச்சாரத்திலும், ஆனந்தத்திலும் பங்களிக்கப்பட்டது.
காஞ்சி காமாட்சியம்மனுக்கும், காமகோடி பீடத்துக்கும், 120 கிராமங்களில் தானமளிக்கப்பட்ட தகவல், கீழம்பி எனும் ஊரில் கிடைத்த செப்பு பட்டயம் வாயிலாக தெரியவந்தது. இதுபோல், பல ஊர்களில் இருந்த செப்பு பட்டயங்களின் அருமை தெரியாத அடுத்த தலைமுறையினர், அவற்றை செப்பு பாத்திரங்களாக மாற்றி விட்டனர்.
ஆனாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாரணவாசி, உள்ளாவூர், மடப்புரம், உதயம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள், நமக்கு காஞ்சி மடத்துக்கான தொடர்பை விளக்குவதாக உள்ளன. எப்போதும், பக்தர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நம் காஞ்சி பெரியவர், ஆற்காடு நவாப் காலத்தில் ஏற்பட்ட கலாசார அச்சுறுத்தலால், நம் பாரம்பரியத்தை காக்கும் வகையில், கும்பகோணம் அருகில் தங்கி தொடர்ச்சியாக செயல்பட்டார்.
அரசர்கள், தர்மத்தை காக்கும் வகையில், நான்கு வேதங்களை படிப்பவர்களுக்காக, வேத பாடசாலைகளை அமைத்ததுடன், பசு, வீடு, சர்வ மானியத்துடன் நிலம் உள்ளிட்டவற்றையும் தந்தனர்.
அதை பின்பற்றிதான், தற்போதைய குழந்தைகளுக்காக, நம் பாரம்பரியம், பண்பாட்டை பின்பற்றும் வகையில், வித்யாபீடங்களுடன், வேத பாடசாலைகள், ராமாயண பாடசாலைகள், நாட்டியம் உள்ளிட்ட கலா பாடசாலைகள், சம்பிரதாய பாடசாலைகள், பஞ்சப்பிரகாரம், நலப்பிரகாரம் உள்ளிட்டவற்றையும் உருவாக்கி வருகிறோம்.
அதற்கான தர்மத்தில் அனைவரும் இணைய வேண்டும். அப்படியான தர்ம காரியம் செய்யும்போது, சங்கோஜம், சங்கடம், சந்தேகம் கொள்ளக்கூடாது. அதேபோல், தர்மம் செய்வதில் ஆண், பெண் என்ற பாகுபாட்டையும் பார்க்கக் கூடாது.
காஞ்சி பெரியவர் அப்போது செய்த நற்காரியங்களை, தற்போது அணுகி, ஆராயும்போது பிரமிப்பாக உள்ளன.
நம் குழந்தைகளை பக்தி, கல்வி, கலைகளில் பலம் வாய்ந்தவர்களாக வளர்ப்பதுடன், கோவில், கைங்கர்யம், வாத்தியம், சமஸ்கிருதம், தர்மம் எனும் நம் பாரம்பரிய அடையாளங்களையும் பின்பற்றுபவர்களாகவும், எந்த சூழலிலும் அதை விட்டு விலகாதவர்களாகவும் வளர்க்க வேண்டும்.
அதற்கு, நம் விழாக்கள், பண்டிகைகள், சம்பிரதாயங்களில், பெரியவர்களுடன் அவர்களையும் உதவும்படி பழக்க வேண்டும். அந்த வகையில், வேதா, ரிஷி, பித்ரு எனும் மூன்று நிலை வழிபாட்டை, நாம் விடக்கூடாது.
இங்கு கட்டப்பட்டுள்ள, 'ஸ்ரீ விஷ்ணு பாத ஷ்ராத்த பவனம்' பித்ருக்களுக்கு செய்யும் வழிபாட்டுக்கான சிறந்த இடமாகவும், நம் பாரம்பரியத்தை காப்பதாகவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு சுவாமிகள் பேசினார்.