நாம் பேசக்கூடாது; நம் செயல்கள் பேச வேண்டுமென நினைப்பவன் நான்: இபிஎஸ் கருத்து
நாம் பேசக்கூடாது; நம் செயல்கள் பேச வேண்டுமென நினைப்பவன் நான்: இபிஎஸ் கருத்து
ADDED : அக் 11, 2026 06:14 PM

சென்னை: 'அ.தி.மு.க., ஆட்சியில் விதைத்த விதைகள், விருட்சமாவதை காண்பது மகிழ்ச்சியை தருகிறது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை மெட்ரோ ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடியை, சென்னை விமான நிலையத்தில் வரவேற்றேன். இந்த திட்டமானது, என் தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியின்போது, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் அனுமதி பெற்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் அடிக்கல் நாட்டப்பட்டது.
மத்திய அரசு நிதி வராத நிலையிலும், மாநில அரசின் நிதியை கொண்டு, பணிகளை அ.தி.மு.க., அரசு தொடங்கியது. பிரதமரை பலமுறை நேரில் சந்தித்து, நிதி கோரினேன். அதை, மத்திய அரசு ஏற்று, 63,246 கோடி ரூபாய் ஒதுக்க, கடந்த 2024-ல் ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில், வடபழனி -- பூந்தமல்லி வழித்தடம், மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், நாம் விதைத்த விதைகள், தற்போது விருட்சமாவதை காண, மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பழனிசாமி நினைத்திருந்தால், மெட்ரோ பாலத்தின் மீது, 'கூலிங் கிளாஸ்' போட்டு 'போட்டோ ஷூட்'; சுரங்கத்தின் அடியில், பாதுகாப்பு ஹெல்மெட் போட்டு ஒரு 'ரீல்ஸ் ஷூட்டிங்' என எடுத்திருக்க முடியும்.
அப்படியான ஏமாற்று அரசியலில், எனக்கு உடன்பாடு இல்லை. 'நாம் பேசக் கூடாது; நம் செயல்கள் பேச வேண்டும்' என்பதை நம்புபவன் நான். யாருடைய ஆட்சி நடந்தாலும், அ.தி.மு.க., அரசின் திட்டங்களே, தமிழக மக்களை உயர்த்திக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
