தவிர்க்க முடியாத ஆதாரங்கள் இருந்தால் விஜயை கைது செய்வோம்: துரைமுருகன்
தவிர்க்க முடியாத ஆதாரங்கள் இருந்தால் விஜயை கைது செய்வோம்: துரைமுருகன்
ADDED : அக் 05, 2025 01:38 AM

காட்பாடி: 'விஜயை கைது செய்வதற்கான சூழல் ஏற்பட்டால், நிச்சயமாக கைது செய்வோம்', என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலுார் மாவட்டம் காட்பாடியில் அவர் அளித்த பேட்டி:
நீர் நிலைகளை துார்வாரி, கரைகளை பலப்படுத்தி இருப்பதால், எவ்வளவு மழை வந்தாலும் தாங்கும் அளவிற்கு, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
கரூர் சம்பவம் தொடர்பாக, நீதிமன்றம் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். த.வெ.க., பற்றி, நீதிபதிகள் உண்மையை சொல்லி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி சாராய மரணத்தின்போது, முதல்வர் ஸ்டாலின் நேரில் செல்லவில்லையே என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். அன்றைய சூழல் வேறு; இன்றைய சூழல் வேறு. கரூரில் 41 பேர் உயிரிழந்தது, சாதாரணமானது அல்ல.
விஜயை கைது செய்ய வேண்டிய சூழல் வந்தால், தவிர்க்க முடியாத ஆதாரங்கள் இருந்தால், நிச்சயமாக கைது செய்வோம். தேவையில்லாமல், அநாவசியமாக யாரையும் கைது செய்ய மாட்டோம். எல்லா விஷயத்திலும் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் தி.மு.க.,வுக்கு இல்லை.
பரவலான பேச்சு கரூரில் விஜய் கூட்டத்துக்கு, உரிய போலீஸ் பாதுகாப்பு அளித்து, எப்படி செயல்பட வேண்டும் என கூறி இருந்தோம். ஆனாலும், துயர சம்பவம் ஏற்பட்டு விட்டது.
இதில், தமிழக அரசையோ, தி.மு.க.,வையோ குற்றம் சொல்ல என்ன இருக்கிறது?
துவக்க காலம் தொட்டு, எதிர்ப்பிலேயே வளர்ந்த இயக்கம் தி.மு.க., எந்த கொம்பனும், இவ்வியக்கத்தை தொட்டு கூட பார்க்க முடியாது.
ஒண்டிக் கொள்ளவும், தாங்கிக் கொள்ளவும் பா.ஜ.,வுக்கு ஒரு இடம் வேண்டும். அதனால், யாருக்கு என்ன நடந்தாலும் சரி... ஓடோடி சென்று பார்ப்பர். பா.ஜ., கூட்டணிக்கு த.வெ.க., செல்லும் என பரவலான பேச்சு உள்ளது.
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும். அ.தி.மு.க., 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என பழனிசாமி கூறுகிறார். சீமான் கூட அப்படித்தான் சொல்லுகிறார். அப்படியென்றால், யார் சொல்வது நிஜம்?
பிரிவினைவாதம் தமிழகத்தில் தீண்டாமை, பிரிவினைவாதம் நிலவுவதாக கவர்னர் ரவி கூறுகிறார். எங்கு சென்று, அவர் அதை கண்டுபிடித்தார் என சொல்ல வேண்டும். எங்களைப் பொறுத்தவரை, ரவி ஒரு கவர்னர் அல்ல; எதிர்க்கட்சி தலைவர்.
பதவிக்குரிய கண்ணியம், அந்தஸ்தை காற்றில் பறக்கவிட்டு, தரம் தாழ்ந்து பேசுகிறார். அதனால் அவரை, கவர்னராக மதிப்பதில்லை. வட மாநிலங்களில் தான் பிரிவினைவாதம் தலை துாக்கி ஆட்டம் போடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.