'திங்கள் முதல் வர்றோம்!':அடம் பிடிப்பதை வாபஸ் வாங்கிய எதிர்க்கட்சியினர்
'திங்கள் முதல் வர்றோம்!':அடம் பிடிப்பதை வாபஸ் வாங்கிய எதிர்க்கட்சியினர்
UPDATED : ஜூலை 25, 2025 11:56 PM
ADDED : ஜூலை 25, 2025 11:31 PM

புதுடில்லி : லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'அமளியில் ஈடுபட மாட்டோம். சபை நடவடிக்கைகள் தொடர முழு ஒத்துழைப்பு தருகிறோம்' என, வாக்குறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், வரும் திங்கட்கிழமை முதல் இரு சபைகளும் கூச்சல், குழப்பமின்றி சுமுகமாக நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 21ல் துவங்கியது.
லோக்சபா, ராஜ்யசபாவில் முதல் நாளே அமளியில் குதித்த காங்., - தி.மு.க., - திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'பஹல்காம் தாக்குதல், 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து விவாதம் நடத்த வேண்டும்; பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது' என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனால், இரு சபைகளிலும் அலுவல்கள் முடங்கின. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நட்டா, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் எவ்வளவு சொல்லிப்பார்த்தும், அக்கட்சிகள் கேட்கவில்லை.
'ஆப்பரேஷன் சிந்துார் உட்பட அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயார்' என, பலமுறை தெரிவித்தும் கூட அமளியில் ஈடு படுவதை எதிர்க்கட்சிகள் விடவில்லை.
இதற்கிடையே, துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபா தலைவராகவும் பதவி வகித்த ஜக்தீப் தன்கர், திடீரென ராஜினாமா செய்ததும், தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று, வழக்கம்போல லோக்சபா, ராஜ்யசபா கூடின. எதிர்க்கட்சிகளும் வழக்கம் போல அமளியில் ஈடுபட, ஐந்தாவது நாளாக இரு சபைகளும் நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டன.
கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து, இரு சபைகளிலும் இதுவரை எந்த அலுவல்களும் நடக்கவில்லை.
எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால், பார்லி., முடங்கி உள்ளது. இதனால் நம் வரிப்பணமும் பல கோடி ரூபாய் வீணானது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு நடக்கும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக, இரு சபைகளிலும் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, அர்ஜும் ராம் மேஹ்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்களும் பங்கேற்றனர்.
அப்போது, பஹல்காம் தாக்குதல், ஆப்பரேஷன்
சிந்துார், பீஹாரில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, அரசு தரப்புக்கும், எதிர்க்கட்சி தரப்பும் இடையே புரிதல் ஏற்பட்டது. அரசின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், 'அமளியில் ஈடுபட மாட்டோம். சபை சுமுகமாக நடக்க ஒத்துழைப்பு தருவோம்' என, தெரிவித்தனர். ஒருமித்த கருத்து ஏற்பட்டதால், வரும் 28 முதல் இரு சபைகளிலும் அலுவல்கள் சுமுகமாக நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன், பஹல்காம் தாக்குதல், ஆப்பரேஷன் சிந்துார் குறித்து விவாதம் நடத்த காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அரசு சம்மதித்தது. அப்படியிருக்கையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவது ஏன்? விவாதம் நடப்பதை தடுப்பதே எதிர்க்கட்சிகள் தான். நாங்கள் அனைத்துக்கும் தயாராக இருக்கிறோம். இந்த ஐந்து நாட்களில் ஒரேயொரு மசோதா மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளது. கிரண் ரிஜிஜு பார்லி., விவகார அமைச்சர், பா.ஜ.,

