தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்போம்: சதுர்வேதி சாமியாருக்கு எச்சரிக்கை
தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்போம்: சதுர்வேதி சாமியாருக்கு எச்சரிக்கை
ADDED : ஏப் 28, 2025 04:52 AM

சென்னை : 'பாலியல் தொல்லை வழக்கில் சிக்கிய, பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி எனப்படும், சதுர்வேதி சாமியார், மே 23ல் ஆஜராகாவிட்டால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்' என, சென்னை அல்லிகுளம் மகளிர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை தி.நகர் பசுல்லா சாலையில், ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரஸ்ட், பாஷ்யகாரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற இரு தொண்டு நிறுவனங்களை நடத்தியவர், வெங்கட சரவணன் என்ற பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி, 47. இவர், 'சதுர்வேதி சாமியார்' என்ற பெயரில் பிரபலமாகி, ஆன்மிக சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்தார்.
புகார்
சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், தொழிலில் ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க, சதுர்வேதி சாமியாரிடம் சென்றார். பிரச்னையை தீர்க்கிறேன் எனக்கூறி, அவரது வீட்டிற்கு சென்ற சதுர்வேதி சாமியார், கீழ்தளத்தில் வசிக்க துவங்கினார். அத்துடன், தொழில் அதிபரின் மனைவி மற்றும் மகளை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக, 2004ல் சதுர்வேதி சாமியார் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சம்மந்தப்பட்ட தொழில் அதிபர் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார், பாலியல் வன்முறை உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சதுர்வேதி சாமியாரை கைது செய்தனர். பின், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
இதை எதிர்த்து, சதுர்வேதி சாமியார் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று உத்தரவிட்டது.
கைது
அதனால், சிறையில் இருந்து வெளியே வந்தார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்; 2016ல் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அதன்பின், ஜாமினில் வெளியே வந்த சதுர்வேதி சாமியார், மீண்டும் தலைமறைவானார். அவரை கைது செய்ய சென்னை பெரியமேடு அல்லிகுளம் வணிக வளாகத்தில் செயல்படும், மகளிர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. எனினும், அவரை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில், சதுர்வேதி சாமியார், மே 23ல் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். தவறினால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் படுவார் என, மகளிர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இத்தகவல், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

