இம்முறையும் பழனிசாமியை தோற்கடிப்போம்: தினகரன் ஆவேசம்
இம்முறையும் பழனிசாமியை தோற்கடிப்போம்: தினகரன் ஆவேசம்
ADDED : டிச 25, 2025 08:41 AM

ஆண்டிபட்டி: 'வரும் தேர்தலில் எந்த கூட்டணியில் இருந்தாலும், ஆண்டிபட்டியில் அ.ம.மு.க., போட்டியிடும்' என்று அக்கட்சியின் பொதுச்செயலர் தினகரன் கூறினார்.
ஆண்டிபட்டியில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில், அ.ம.மு.க.,வின் கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில், எங்கள் ஓட்டு வங்கி அதிகரித்துள்ளது. 2026 தேர்தலில் அ.ம.மு.க.,வை தவிர்த்து விட்டு, எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது.
அ.ம.மு.க.,வை தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று, பெரிய கட்சிகளும், புதிய கூட்டணியை உருவாக்க விரும்பும் கட்சிகளும் தொடர்ந்து எங்களை அணுகி வருகின்றன.
அதுகுறித்த முடிவு, தை மாதத்தில் அறிவிக்கப்படும். நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும், ஆண்டிபட்டி தொகுதியில் அ.ம.மு.க., வேட்பாளர் தான் போட்டியிடுவார். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது, யார் வெற்றி பெறக்கூடாது என்பதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டோம்.
அதில் நாங்கள் வெற்றி பெற்றோம். இம்முறையும் பழனிசாமியையும், அவரை சார்ந்தோரையும் தோற்கடிப்போம். வரும் தேர்தலில், அ.ம.மு.க., வேட்பாளர்கள் வென்று சட்டசபைக்குள் செல்வது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.

