வக்ப் சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடருவோம்: நவாஸ்கனி
வக்ப் சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடருவோம்: நவாஸ்கனி
ADDED : ஏப் 05, 2025 09:45 PM
சென்னை:மத்திய அரசின் வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக, தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.,யுமான நவாஸ்கனி கூறினார்.
அவரது பேட்டி:
பார்லிமென்டில் வக்ப் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின், இந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது. இந்த சட்டத் திருத்தம் இஸ்லாமியர் நலனுக்காக கொண்டு வரப்பட்டதாக, மத்திய உள்துறை, சிறுபான்மை நலத் துறை அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால், எந்த வகையில் இஸ்லாமியர்கள் பயன் அடைவர் என்பதை கூறவில்லை.
தற்போது, வக்ப் வாரியத்திற்கு என உள்ள நிலங்களில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த பணம் இல்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு கடனுதவி வழங்காத மத்திய அரசு, இஸ்லாமியர் நலனுக்காக சட்டம் கொண்டு வருவதாக கூறுவது ஏற்புடையது அல்ல. இந்த சட்டம் செயல்படுத்தப்படும்போது, வக்ப் வாரியத்தின் வருமானம் அதிகரிக்கும் என கூறுகின்றனர். ஆனால், எவ்வாறு அதிகரிக்கும் என்பதை கூறவில்லை.
இதைப்போல, வக்ப் வாரியத்தின் சொத்துக்களை அடையாளம் காணும் உரிமை, இந்த சட்ட திருத்தத்தால் பறிக்கப்படும். வக்ப் வாரிய சொத்துக்களை அபகரிக்கவே, மத்திய அரசு இத்தகைய சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
இது தமிழகத்தில் நடக்காது என்றாலும், பா.ஜ., ஆளும் வட மாநிலங்களில் எளிதில் நடக்கும். எனவே, ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்ட பின், வக்ப் வாரிய சட்டத் திருத்தம் தொடர்பாக, எங்கள் கட்சி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.