'வக்பு சொத்துக்களை கபளீகரம் செய்ய திருத்தம்' நீதிமன்றம் செல்வோம்:காதர் முகைதீன் விளக்கம்
'வக்பு சொத்துக்களை கபளீகரம் செய்ய திருத்தம்' நீதிமன்றம் செல்வோம்:காதர் முகைதீன் விளக்கம்
ADDED : ஜன 30, 2025 02:20 AM
ஈரோடு:''வக்பு வாரிய சொத்துக்களை கபளீகரம் செய்ய திருத்தம் கொண்டு வர முயற்சி நடக்கிறது. எனவே, இதை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம், '' என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து நடந்த கூட்டத்துக்கு, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்ற காதர் முகைதீன், நிருபர்களிடம் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதியில், சிறுபான்மையினர் ஓட்டுக்கள், 40 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. அனைத்து பள்ளிவாசல்கள் கூட்டமைப்பு சார்பில் அமைச்சர் முத்துசாமி, வேட்பாளர் சந்திரகுமார் ஆகியோரிடம் கோரிக்கைகளை தெரிவித்தோம். ஈரோட்டை பொறுத்தவரை ஈ.வெ.ரா.,வும், இங்குள்ள முஸ்லிம்களும் இணைந்து வாழ்ந்துள்ளனர். தி.மு.க.,வுடன் நாங்கள் கொள்கை ரீதியான கூட்டணியாக செயல்படுகிறோம். ஆதரவு தெரிவிக்கிறோம்.
வக்பு வாரிய மசோதா திருத்தங்களுக்கான கூட்டுக்குழுவில், 26 உறுப்பினர்கள் உள்ளதில், 16 பேர் பா.ஜ., மற்றும் அக்கூட்டணியை சேர்ந்தவர்கள். மற்ற, 10 பேர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதால், அக்கூட்டத்தில் இருந்து ராஜா உட்பட, 10 பேர் வெளியே வந்துவிட்டனர். கூட்டக்குழுவில் எடுத்துள்ள, 44 திருத்தங்களில் ராஜா உள்ளிட்ட, 10 பேரும் கூறிய திருத்தங்களை ஏற்கவில்லை. மாறாக பா.ஜ., மற்றும் அவர்களது கூட்டணியில் உள்ளவர்கள் கூறியதை மட்டும் ஏற்று, திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் ரயில்வே, ராணுவம் சொத்துக்கு அடுத்தப்படியாக அதிகம் உள்ளது வக்பு வாரிய சொத்துக்கள். பா.ஜ., ஆட்சியாளர்கள், முஸ்லிம்களுக்கு சொந்தமாக உள்ள வக்பு சொத்துக்களை கபளீகரம் செய்து, ராணுவ, ரயில்வே சொத்துக்களை அரசு சொத்துக்களாக மாற்றியதுபோல, வக்பு சொத்துக்களையும் மாற்ற சதி திட்டம் கொண்டு வந்துள்ளனர். இதை எதிர்த்து போராடுவோம். நீதிமன்றம் செல்வோம்.
இவ்வாறு கூறினார்.

