ADDED : செப் 04, 2025 02:16 AM

சென்னை:இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால், நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகிஉள்ளது.
எனவே, அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில், அந்நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் குளிர்பானங்களை புறக்கணிப்பதாக, தமிழக ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நம் நாட்டில் இருந்து ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கடல் உணவு பொருட்கள் உள்ளிட்டவை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஏற்கவில்லை தமிழகத்தில் இருந்து ஜவுளி, தோல் பொருட்கள், ஆபரணங்கள், அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்தின் மொத்த ஏற்றுமதியில், அமெரிக்காவின் பங்கு 31 சதவீதமாக உள்ளது.
இந்திய வேளாண் மற்றும் பால் பொருட்கள் சந்தை யில் கால் பதிக்க, அமெ ரிக்கவால் முடியவில்லை. சோளம், சோயாபீன்ஸ், ஆப்பிள், பாதாம் பருப்பு மற்றும் எத்தனால் மீது, இந்தியா வரிகளை குறைக்க வேண்டும் என அமெரிக்கா வற்புறுத்தியது; அதை, நம் நாடு ஏற்கவில்லை.
இதனால், அதிருப்தி அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், நம் நாட்டில் இருந்து தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ளார்.
இதையடுத்து, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தமிழக தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகிஉள்ளது.
எனவே, அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில், அந்நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் குளிர்பானங்களை புறக்கணிக்கப் போவதாக, தமிழக ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து, தமிழக ஹோட்டல்கள் சங்க தலைவர் எம்.வெங்கடசுப்பு கூறியதாவது:
அமெரிக்காவைச் சேர்ந்த 'பெப்சி, கோககோலா' போன்ற நிறுவனங்கள், நம் நாட்டில் குளிர்பானங்களையும், குடிநீரையும் விற்கின்றன. நம் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களே தரமான குளிர்பானங்கள், குடிநீரை தயாரித்து விற்கின்றன.
பதிலடி அமெரிக்க அதிபர் டிரம்ப், நம் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால், நம் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
டிரம்பின் வரி விதிப்புக்கு பதிலடி தரும் வகையில், நம் நாட்டு தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், இனி அமெரிக்க நிறுவனங்களின் குளிர்பானங்களை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பு, ஹோட்டல் தொழில்களை பாதிக்காது. இருப்பினும் நாங்கள் அரசுக்கு உதவும் விதமாக, வெளிநாட்டு குளிர்பானம் மற்றும் உணவுகளை தவிர்த்து, உள்ளூர் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.