ஆலோசனைக்குழு அமைத்து காலம் கடத்துவதை அனுமதிக்க மாட்டோம்; அரசுக்கு சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் எதிர்ப்பு
ஆலோசனைக்குழு அமைத்து காலம் கடத்துவதை அனுமதிக்க மாட்டோம்; அரசுக்கு சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் எதிர்ப்பு
ADDED : ஜன 13, 2025 03:57 AM
மதுரை : ''புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசனைக் குழு அமைத்து காலம் கடத்துவதை அனுமதிக்க மாட்டோம்'' என சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் மு.செல்வக்குமார், சு.ஜெயராஜராஜேஸ்வரன், பி.பிரடெரிக் ஏங்கல்ஸ் அறிக்கை: தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம், விரைவில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கிய பின் ஆலோசனைக் குழு அமைத்து அரசு நடவடிக்கை எடுக்கும் என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
இந்த அறிவிப்பு 2021 சட்டசபைத் தேர்தலின் போது தி.மு.க., அளித்த வாக்குறுதிக்கு எதிரானது. அன்று தேர்தல் வாக்குறுதி எண் 309ல் பழைய திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அறிவித்தனர்.
அதற்கு மாறாக, தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சில மாற்றங்களுடன் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்பது அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தி.மு.க., அரசு செய்யும் நம்பிக்கை துரோகம்.
புதிய பென்ஷன் திட்டத்தையும் விட, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் அரசுகளுக்கு பல மடங்கு கூடுதல் செலவாகும். அதனால்தான் மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசைத் தவிர இதர மாநிலங்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை.
வரும் ஏப்.,1 முதல் அமல்படுத்த உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை ஏப்ரலில்தான் அறிவிக்க உள்ளது. அதன் பின்பு தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்க மே மாதத்திற்குப்பின் குழு அமைக்கலாம். இந்தக் குழு என்பது காலம் தாழ்த்தும் நடவடிக்கை என்பது கடந்த கால அனுபவம்.
2016ம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா அரசு ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது. மூன்று மாதத்தில் அறிக்கையை பெறுவதாகக் கூறி, 3 ஆண்டுகள் கழித்து தான் வல்லுநர் குழு அறிக்கையை அரசு பெற்றது. அதன்பின்பு, ஆறு ஆண்டுகளாகியும் இன்று வரை வல்லுநர் குழு அறிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தியுள்ள தமிழகம் தவிர்த்து, இதர மாநிலங்களில் ஓய்வு பெற்ற, இறந்த அரசு ஊழியர் குடும்பங்களுக்கு பணிக் கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் 22 ஆண்டுகளாக தமிழகத்தில் அவ்வாறு வழங்காத அவல நிலை உள்ளது. தி.மு.க., அரசு ஆசிரியர், அரசு ஊழியர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
கல்லுாரி ஆசிரியர் கழகம் எதிர்ப்பு
இந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ் கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டத்தில் கணக்கு தொடங்கி, ஊழியர் தரப்பில் 10 சதவீதம், மத்திய அரசு சார்பில் 14 சதவீதம் பங்களிப்பு வழங்கி, பி.எப்.ஆர்.டி.ஏ., என்ற திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இத்திட்டத்தை மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
ஆனால் தமிழகத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பெறப்படும் 10 சதவீதம் பங்களிப்பும், மாநில அரசின் 10 சதவீதம் பங்களிப்பும் சேர்ந்து எந்த ஒரு பென்ஷன் திட்டத்திலும் முதலீடு செய்யப்படவில்லை. ஏற்கனவே முதலீடு செய்யப்பட்ட திட்டத்தில் இருந்து தமிழக அரசு வெளியேறுவது என்ற சிக்கல் இல்லை.
இதனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின், கடந்த சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி, பழைய பென்ஷன் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும். மேலும் நிறுத்தி வைத்துள்ள ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக்கும் திட்டத்தையும் உடனே அமல்படுத்த வேண்டும் என்றார்.
ஏமாற்று வேலை
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயில் கூறியதாவது:
புதிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் செயல்படுத்துவது குறித்து குழு அமைக்கப்படும் என அரசு அறிவித்தது ஏமாற்று வேலை. இதனை திரும்ப பெற்று, தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒரு லட்சம் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பாதிக்கும் வகையில் வெளியிட்ட அரசாணை 243 யை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.22ல் சென்னையில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் உண்ணாவிரத போராட்டத்திலும், மார்ச் 7ல் 'டிட்டோஜாக்' சார்பில் நடக்கும் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டத்திலும் எங்கள் சங்க ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர் என்றார்.