ADDED : மார் 11, 2024 05:00 AM
சென்னை : ''போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு நிச்சயமாக துணைபோக மாட்டோம்; காப்பாற்றவும் மாட்டோம்; சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தருவோம்,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
சென்னை அறிவாலயத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: தி.மு.க.,வை களங்கப்படுத்தும் நோக்கில், பா.ஜ., செய்யும் அரசியல், தமிழகத்திலும் ஈடேறாது; தேசிய அளவிலும் ஈடேறாது.
வருமான வரித்துறை, சி.பி.ஐ., - அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை களமிறக்கிவிட்ட பா.ஜ., அரசு, தி.மு.க.,வை தேர்தல் களத்தில் களங்கப்படுத்தும் நோக்கில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவை களமிறக்கிஉள்ளது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், போதைப்பொருள் தடுப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளை நீதிமன்றமே பாராட்டி இருக்கிறது. ஆனால், தி.மு.க.,வை மிரட்டிப் பார்க்கலாம் என்று எண்ணுகின்றனர்.
அமைச்சர்கள் வாயிலாக, குட்கா வியாபாரிகளுக்கு அ.தி.மு.க., ஆட்சி துணையாக இருந்தது நாடறிந்த உண்மை.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து, ஒரு பேப்பர் எடுக்கப்படுகிறது. அதில், 85 கோடி ரூபாய் எந்தெந்த அமைச்சர்களுக்கு தரப்பட்டுள்ளது என்ற விபரங்கள் உள்ளன. அதிலும், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கட்சியில் சேருபவர்கள் அனைவரையும் சோதித்து பார்க்க முடியாது. ஆனால், தவறு செய்திருக்கிறார் என்று தெரிந்தால், அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்படியே, ஜாபர் சாதிக்கை கட்சியை விட்டு நீக்கியுள்ளோம். எங்களை பொறுத்தவரைக்கும் சட்டப்பூர்வமான நடவடிக்கை அனைத்தும் எடுக்கப்படும். நிச்சயமாக குற்றவாளிகளுக்கு துணைபோகவும் மாட்டோம், காப்பாற்றவும் மாட்டோம்; சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தருவோம். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.
சட்டப்படி நடவடிக்கை
இந்த வழக்கு தொடர்பாக, ஆதாரமின்றி தி.மு.க.,வினர் மீது குற்றம் சாட்டுபவர்கள் மீது, சிவில் மற்றும்கிரிமினல் வழக்கு தொடருவோம். போதைப்பொருட்களை ஒழிக்க, தி.மு.க., போல வேறு எந்தகட்சியும் நடவடிக்கை எடுத்தது இல்லை.
பி.வில்சன், தி.மு.க., வழக்கறிஞர்.

