ADDED : மே 04, 2025 03:41 AM

தமிழக காங்கிரஸ் கட்சியை சீரமைக்கும் வகையில், கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அடுத்ததாக, மாவட்ட தலைவர்களை மாற்றும் நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ளனர். அதற்கு, 25 மாவட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
தங்கள் மாவட்டத்தில் நியமிக்கப்பட வேண்டிய கிராம காங்கிரஸ் கமிட்டிக்கான நிர்வாகிகள் பட்டியலை, கட்சி தலைமையிடம் ஒப்படைக்காமலும் உள்ளனர்.
இதுகுறித்து, டில்லி மேலிடத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, கட்சியில் உள்ள 77 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்க, மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு டில்லி மேலிடம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி, நாடு முழுதும் மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தவும், வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து பிரசாரம் செய்யவும், காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இப்பணிகளை செய்ய, 77 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை, செல்வப்பெருந்தகை நியமித்தார்.
இதன் வாயிலாக, அதிருப்தி மாவட்ட தலைவர்கள் 25 பேருக்கும், 'செக்' வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேறு வழியின்றி, மாவட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று, 77 மாவட்டங்களிலும் ஒரே நாளில், இதற்கான ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளனர். சென்னையில், இன்று காங்கிரஸ் மைதானத்தில் நடக்கவுள்ள மாநாடு குறித்து விவாதித்துள்ளனர்.
அதில், மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசுகின்றனர்.
இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காங்கிரஸ் மைதானத்தில் நடந்த பல கூட்டங்கள், தமிழக அரசியல் வரலாற்றை மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும் திருப்பு முனைகளை ஏற்படுத்தி உள்ளன.
'அந்த வகையில், நடக்கவிருக்கும் எழுச்சிமிக்க காங்கிரஸ் மாநாட்டுக்கு பெருந்திரளாக தொண்டர்கள் திரள வேண்டும்' என, அழைப்பு விடுத்து உள்ளார
- நமது நிருபர் -