ADDED : ஆக 27, 2024 06:54 AM

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இயல்பான அளவை விட, 71 சதவீதம் கூடுதலாக, இந்த ஆண்டில் தென் மேற்கு பருவ மழை பெய்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த சில ஆண்டுகளாக, தென் மேற்கு பருவ காலத்தில், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு பரவலாக மழை கிடைக்கிறது. குறிப்பாக, வளிமண்டல சுழற்சி அல்லது வெப்ப சலன மழை வாயிலாக, தமிழகம் பயன் பெறுகிறது.
தென் மேற்கு பருவ காலத்தில் ஓரளவுக்கு மழை கிடைப்பதால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
இந்த வகையில், இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை வழக்கத்தை விட, ஒரு வாரம் முன்கூட்டியே துவங்கியது.
கடந்த ஜூன் முதல் ஆக., 26 வரையிலான காலத்தில், தமிழகம், புதுச்சேரியில், 19 செ.மீ., மழை பெய்வது இயல்பான அளவு.
ஆனால் நடப்பாண்டில், இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில், 33 செ.மீ., மழை பெய்துள்ளது. இது இயல்பான அளவை விட, 71 சதவீதம் அதிகம்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிக அளவு மழை பெய்துஉள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பான அளவாக, 5 செ.மீ., மழை பெய்ய வேண்டிய நிலையில், 28 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, 438 சதவீதம் அதிகம்.
சென்னையில் இயல்பான அளவான, 28 செ.மீ., மழையை விட, 44 செ.மீ., பெய்துள்ளது. இது, 56 சதவீதம் அதிகம்.
விருதுநகரில் 167; திருப்பூரில் 155; தேனியில் 151; கரூரில் 121, ராணிப்பேட்டையில் 103 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.