தமிழகத்தில் தீபாவளிக்கு பின் வானிலையில் மாற்றம் நிகழும்
தமிழகத்தில் தீபாவளிக்கு பின் வானிலையில் மாற்றம் நிகழும்
ADDED : அக் 30, 2024 06:08 AM

சென்னை: 'வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களின் உள்பகுதியில், பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சில நாட்களுக்கு, இது தொடரும். அத்துடன், தமிழகம் உள்ளிட்ட தென் மாநில கிழக்கு கடலோர பகுதிகளின் மேல், தென்மேற்கு அரபிக் கடலின் மேல் என, இரண்டு வளி மண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். அக்., 31க்கு பின், வானிலையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். அதனால், நவ., 1 முதல், சில மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது, பிற மாவட்டங்களுக்கும் விரிவடையும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.