ADDED : நவ 11, 2024 06:25 AM

சென்னை : 'வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இது, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இன்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, தமிழகத்தில் கனமழையை கொடுக்க துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யலாம்.
அதன்பின், நவம்பர், 13ல் இருந்து, சென்னை, திருவள்ளூர் முதல் துாத்துக்குடி வரையிலான மாவட்டங்களில் கனமழை துவங்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.