ADDED : செப் 02, 2024 06:55 AM

சென்னை: 'தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில், மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த தரை காற்று வீசுவதுடன், இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் வெளியிட்ட அறிக்கை:
அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவாகி, வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதியில் கரையை கடந்தது. இந்த நிகழ்வு இன்னும் முடியவில்லை. இதன் தாக்கம் காரணமாக, தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் கனமழை தீவிரமடைந்துள்ளது.
அரபிக்கடலில் ஏற்பட்ட நிகழ்வு, மாலத்தீவு அருகில் காணப்படும் சுழற்சி காரணமாக, கேரளா, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது.
இன்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த தரைகாற்று வீசுவதுடன், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.