இலவச வேட்டி, சேலை தயாரிப்பு தாமதத்திற்கு அரசே காரணம் நெசவாளர்கள் புகார்
இலவச வேட்டி, சேலை தயாரிப்பு தாமதத்திற்கு அரசே காரணம் நெசவாளர்கள் புகார்
ADDED : ஜன 13, 2025 12:17 AM
சென்னை: பொங்கல் இலவச வேட்டி, சேலை தயாரிப்பு பணிகள் தாமதமடைய அரசே காரணம் எனவும், பண்டிகை நாட்களில் நெசவாளர்களுக்கு அரசு நெருக்கடி கொடுப்பது ஏற்புடையதல்ல என்றும், நெசவாளர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் உள்ள, 1,134 கைத்திற நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, வேட்டி, சேலைகள் தயார் செய்யப்பட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், 1.77 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க திட்டமிடப்பட்டு, கடந்தாண்டு அக்டோபரில் தயாரிப்பு பணி துவங்கியது.
தற்போது வரை, 1.67 கோடி வேட்டிகள்; 1.40 கோடி சேலைகள் நெய்யப்பட்டு, பொங்கல் பரிசு தொகுப்புடன் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மீதமுள்ள, 10 லட்சம் வேட்டிகள், 40 லட்சம் சேலைகள் தயாரிப்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு, நெசவாளர்களுக்கு அரசு நெருக்கடி தருவதாகவும், இதனால், பண்டிகை நாட்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்றும், நெசவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, நெசவாளர்கள் சிலர் கூறியதாவது:
வேட்டி, சேலை தயாரிப்புக்கு, 'டெண்டர்' விடுவது, நுால் வழங்குவது உள்ளிட்ட பணிகளை, அரசு தாமதப்படுத்தி விட்டது.
இதனால், 2024 ஆகஸ்டில் துவங்க வேண்டிய நெசவு பணிகள், அக்டோபரில் தான் துவங்கின.
இதுவரை, 1.67 கோடி வேட்டிகள்; 1.40 கோடி சேலைகளை தயார் செய்து அரசிடம் வழங்கியுள்ளோம்.
வரும், 31ம் தேதிக்குள் அனைவருக்கும் வேட்டி, சேலை வழங்கப்படும் என, அரசு தெரிவித்துள்ளது. எனவே, மீதமுள்ள வேட்டி, சேலைகளை விரைவாக தயாரித்து தருமாறு, நெசவாளர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
நாளை பண்டிகை துவங்க உள்ள நிலையில், அனைவரும் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஆனால், நெசவாளர்கள் மட்டும் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
பண்டிகை நாட்களில், நெசவாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பது முறையல்ல. வேட்டி, சேலை தயாரிப்பு பணிகள் தாமதமடைய அரசே முழு காரணம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.