ADDED : டிச 05, 2024 11:50 PM
சென்னை, : 'ஆரணியில் கனமழையால், பட்டு நெசவு தறிகள் மற்றும் உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என, திருவண்ணாமலை மாவட்ட நெசவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, அம்மாவட்ட நெசவாளர்கள் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 10,000க்கும் அதிகமான மக்கள், நெசவுத்தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.
இங்கு நெய்யப்படும் பட்டு புடவைகள், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், 'பெஞ்சல்' புயல் காரணமாக, சைதாப்பேட்டை, முள்ளிப்பட்டு, நடுகுப்பம், மெய்யூர் உள்ளிட்ட கிராமங்களில், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
இதனால், நெசவாளர்களின் தறி கால்குழியில், நீர் தேங்கியதோடு, நெசவுக்கு உதவும் ஜாக்காடு பெட்டி, டிசைன் அட்டைகள் மற்றும் தறிகள், நீரில் மூழ்கி சேதம் அடைந்துஉள்ளன. இதனால், நெசவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ஈரப்பதம் காரணமாக, பட்டின் சாயம் கலங்கி, பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சேலையின் மதிப்பு, 25,000 ரூபாய். இதனால், நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாகும். எனவே, பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு அவர்களின் பாதிப்புக்கு ஏற்ப, தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.