ADDED : செப் 01, 2026 03:03 AM

பைலட் பாடிய கவிதை
'இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்கப் போகிறோம்; பயணியர் அனைவரும் சீட் பெல்ட்டை இறுக கட்டிக் கொள்ளுங்கள்' என்று அறிவிப்பது தான், விமான பைலட்டுகளின் வழக்கம். ஆனால், கொல்கட்டாவில் தரை இறங்குவதற்கு முன், இண்டிகோ பைலட் வெளியிட்ட அந்த அறிவிப்பு, பயணியருக்கு ஆச்சர்யம் அளிப்பதாக இருந்தது. கவிஞர் மஜ்ரூ சுல்தான்புரியின் பிரபலமான உருது கவிதையின் சில வரிகளை சொல்லி, பயணம் நிறைவு பெற இருப்பதாக அறிவித்தார் பைலட்.
'இலக்கை நோக்கி தனியாகத் தான் பயணிக்கத் தொடங்கினேன்; வழியில் என்னுடன் பலர் இணையத் தொடங்கினர். எங்கள் பயணக்குழு மிகப்பெரியதாக உருவாகி இருக்கிறது' என்ற அந்த கவிதை வரிகள், பயணியரின் இதயத்தை வருடுவதாக இருந்தன. பைலட் அறிவிப்பை படம் பிடித்த பயணி இன்ஸ்டாகிராமில் பதிந்த வீடியோவை பார்த்த பலரும், கவிதை பாடிய 'கூல்' பைலட்டை புகழ்ந்து வருகின்றனர்.
சந்தையை படித்த ஜோதிடர்
டில்லி ஜோதிடர் ஒருவர் ஆண்டுக்கு மூன்று முறை ஜோதிட ஆலோசனை வழங்க, 25 ஆயிரம் ரூபாய் வசூலிப்பதாகவும், அவரிடம் அத்தகைய கட்டணம் செலுத்திய ஆயிரம் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், எக்ஸ் தளத்தில் நீத்து கண்டேல்வால் வெளியிட்ட பதிவு, 'டிரெண்ட்' ஆனது. இதில் மட்டுமே அந்த ஜோதிடருக்கு ஆண்டுக்கு 2.5 கோடி ரூபாய் கிடைப்பதாக நீத்து கூறியுள்ளார். இந்த பதிவில் நெட்டிசன்கள் செய்த கமென்ட்கள், குபீர் சிரிப்பை வரவழைப்பதாக உள்ளன.
'அந்த ஜோதிடர் நட்சத்திரங்களை படிக்கவில்லை; சந்தை நிலவரத்தை படித்து வைத்திருக்கிறார்' என்கிறார் ஒருவர். இன்னொருவர், 'எப்போதாவது அறிவுரை சொல்வதற்கு 25 ஆயிரம் ரூபாயா? என் உறவினர்கள் எனக்கு வாழ்நாள் முழுதும் இலவசமாக அதைத்தானே செய்து கொண்டிருக்கின்றனர்' என்று கூறியுள்ளார். 'ஜோதிடம் என்பது பில்லியன் டாலர் வணிகம்; எத்தகைய பொருளாதார மந்த நிலையையும் தாக்குப்பிடிக்கும். மந்த நிலை வந்தால் தான், இன்னும் சிறப்பாக வளர்ச்சி பெறும்' என்கிறார், இன்னொரு நெட்டிசன்.
பூனைக்கு மரியாதை
கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற வந்த மாணவர், பூனையையும் தோளில் வைத்து அழைத்து வந்தது, இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. புனே பிரிக் கல்லுாரியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. மாணவர் தோளில் ஜம்மென்று அமர்ந்திருந்த பூனையும், பட்டதாரிக்குரிய தொப்பி அணிந்திருந்தது; போட்டோவுக்கும் சிறப்பாக போஸ் கொடுத்தது.
பூனையை பார்த்த பேராசிரியர்கள், அதை தடவிக் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இணையத்தில் அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், 'இந்த காட்சியில் பிரதான கேரக்டரே அந்த பூனை தான்' என்று கமென்ட் செய்துள்ளார். 'இது ConvoCATion என்கிறார் இன்னொருவர். 'எஜமானர் பட்டம் வாங்கினால், பூனைக்கெல்லாம் தொப்பி தருகின்றனர். நான் பட்டம் வாங்கியபோது, எனக்கே தொப்பி தரவில்லை' என்று வருத்தப்பட்டுள்ளார், இன்னொரு நெட்டிசன். பட்டமளிப்பு நிகழ்வில் பூனையை அனுமதித்த கல்லுாரியையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
'பிக்னிக் ஸ்பாட்' ஆனது சாலை
ராஜஸ்தானில் ஒரு குடும்பத்தினர், புதிதாக அமைக்கப்பட்ட விரைவு நெடுஞ்சாலையில் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இதைக் கண்டு, நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். 'சாலையை பிக்னிக் ஸ்பாட் ஆக மாற்றிக்கொள்வதில் ஏதோ பெருமை இருப்பது போல இவர்கள் நடந்து கொள்கின்றனர்' என்று ஒருவர் பதிந்துள்ளார். இன்னொருவர், 'பொது இடங்களை சுத்தமாக பராமரிப்பது, யாரோ ஒருவரின் பொறுப்பு என்பது போல இந்த செயல் இருக்கிறது' என்று கூறியுள்ளார். 'இதைப் பார்த்தால் நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது' என்று ஒருவர் வருத்தப்பட்டுள்ளார்.
முடிவற்ற பள்ளிப்படிப்பு
கார்ப்பரேட் நிறுவன வேலை என்பது, சம்பளத்துடன் கூடிய பள்ளிப்படிப்பு போன்றது; வாரந்தோறும் தேர்வு நடக்கும்; அதற்கு முடிவே இல்லை என்ற பெங்களூரு பெண்ணின் பதிவு, 'டிரெண்டிங்'கில் உள்ளது. சாரு குப்தா என்ற அந்த பெண் வெளியிட்ட வீடியோவில், 'வேலையில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன; இன்றும் கூட பள்ளியில் இருப்பது போலவும், தேர்வு நடப்பது போலவும் உணர்கிறேன்' என்று கூறியுள்ளார். ஏராளமானோர், தங்கள் நிலையும் இதேபோலத் தான் இருக்கிறது என்று கமென்ட் செய்துள்ளனர்.
