ADDED : மார் 15, 2024 12:43 AM
சிவகங்கை:தமிழகம் முழுதும் உள்ள 28,000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட உள்ளன. 'பள்ளிகளில் 100 எம்.பி.பி.எஸ்., வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை, அதிகபட்சம் 1,500 ரூபாய் கட்டணத்துக்குள் நிறுவிக் கொள்ளலாம்.
'அதற்கான தொகை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பப்படும்' என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, பி.எஸ்.என்.எல்., நிறுவன திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலர் சகாயதைனேஸ் கூறியதாவது:
ஏற்கனவே இணையதள இணைப்பு பெற்றுள்ள பள்ளிகள் தவிர்த்து, புதிதாக இணைப்பு பெறவுள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வாயிலாக, பிராட்பேண்ட் இணையதள சேவையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் எம்.ஆர்த்தி, துறை இயக்குனர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருந்தார்.
அதன் படி, தலைமையாசிரியர்கள் இணையதள இணைப்பு பணி மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளிகளின் துாரத்திற்கேற்ப 3000 முதல் 30,000 ரூபாய் வரை செலவு ஏற்படும் என தொலைத்தொடர்பு அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.
இந்த பணத்தை, கிராமத்தில் உள்ளவர்களிடம் நன்கொடை பெற்று செலுத்துமாறு கல்வி அதிகாரிகள் வாய்மொழியாக தெரிவித்துள்ளனர். இதனால் தலைமையாசிரியர்கள் புலம்பி வருகின்றனர். இணையதள இணைப்பிற்கான முழு பணத்தையும் தமிழக அரசு செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

