ADDED : ஜூலை 02, 2025 12:42 AM
சென்னை:அரசு ஊழியர்களின் திருமணத்திற்காக வழங்கப்படும் திருமண முன்பணத்தை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி நிதித்துறை அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் திருமணத்திற்கு மற்றும் தங்கள் மகன், மகள் திருமணத்திற்கு, தேவை அடிப்படையில் திருமண முன்பணம் பெற்று வந்தனர்.
பெண் ஊழியர்களுக்கு 10,000 ரூபாய்; ஆண் ஊழியர்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்பட்டது. இது, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, சட்ட சபையில் 110 விதியின் கீழ், முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தை செயல்படுத்த, நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பணி ஓய்வு பெறுவதற்கு, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உள்ள அரசு ஊழியர்களுக்கு, இந்த திருமண முன்பணம் கிடைக்கும்.
திருமணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்த உதவித்தொகை விடுவிக்கப்படும். இது, 36 தவணைகளில் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப் பட்டுள்ளன.