களைகட்டுது : ஒன்று சேர்ந்தனர் பன்னீர், செங்கோட்டையன், தினகரன்
களைகட்டுது : ஒன்று சேர்ந்தனர் பன்னீர், செங்கோட்டையன், தினகரன்
UPDATED : அக் 30, 2025 11:51 PM
ADDED : அக் 30, 2025 11:25 PM

மதுரை :   அ.தி.மு.க., சண்டை, மீண்டும் களைகட்ட துவங்கி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் ஒன்று சேர்ந்தனர். அதேநேரத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியோ, “எவ்வளவு சோதனை வந்தாலும் எதிர்ப்பேன். பன்னீர், செங்கோட்டையன், தினகரன் ஆகியோர், தி.மு.க.,வின் பி டீம்,” என்று கொந்தளித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியில் இருந்து பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். மீண்டும் கட்சியில் இணைய விரும்பிய அவரை சேர்க்க, பழனிசாமி முன்வரவில்லை. நம்பியிருந்த பா.ஜ., தலைமையும் கைவிட்ட நிலையில், அரசியலில் பன்னீர் தனித்து விடப்பட்டார்.
அடுத்து, தன்னுடன் இணக்கமாக செல்லாத மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனையும் பழனிசாமி ஓரம் கட்டினார்.
கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என குரல் எழுப்பியதை தொடர்ந்து, அவரது கட்சி பதவிகளையும், ஆதரவாளர்களின் பதவிகளையும் பறித்து, அதிரடி காட்டினார் பழனிசாமி.
பழனிசாமியால் தனித்து விடப்பட்ட செங்கோட்டையன், பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோர் இணைந்து செயல்பட முடிவு செய்தனர். இதற்கான நிகழ்வாக, தேவர் குருபூஜை அமைந்தது.
இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக, நேற்று முன்தினம் இரவே செங்கோட்டையன் மதுரை வந்தார். தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவரை, நேற்று காலை மதுரை வந்த பன்னீர்செல்வம் சந்தித்தார். பின், தேவர் குருபூஜையில் பங்கேற்க, இருவரும் ஒரே காரில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்றனர்.
பசும்பொன் அடுத்த நெடுங்குளம் கிராமம் அருகே இருவரும் காத்திருந்தனர். அங்கு தினகரன் வந்து சேர்ந்தார். போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சசிகலாவை, அவர்களால் வரவேற்க முடியவில்லை.
எனவே, சசிகலா தவிர மற்ற மூன்று பேரும், பசும்பொன் கிராமம் சென்று, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தாமதமாக அங்கு வந்த சசிகலாவை சந்தித்தனர்.
தேவர் குருபூஜையில் சந்தித்துக் கொண்ட மூவரும், அரசியலில் இணைந்து செயல்பட முடிவு செய்தனர். இதை அறிந்ததும் கோபமான பழனிசாமி, “எவ்வளவு சோதனை வந்தாலும் எதிர்ப்பேன். தினகரன், பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர், தி.மு.க.,வின் 'பி டீம்' ஆக செயல்படுகின்றனர்,” என கொந்தளித்தார்.
இதுகுறித்து, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மதுரை முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன்  கூறுகையில், “எங்களை, 'பி டீம்' என சொல்லும் பழனிசாமி, தி.மு.க.,வின், 'ஏ1 டீம்' ஆக உள்ளார். முதல்வர் ஸ்டாலின் நிழலில் அரசியல் செய்து வருகிறார்,” என்றார்.
இதற்கிடையே தேர்தல் நெருங்குவதால், பன்னீர்செல்வம் புதிய கட்சி துவக்க திட்டமிட்டு, தேர்தல் கமிஷனிடம் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் ஆகியோரை, அ.தி.மு.க.,வில் சேர்க்க மறுத்தால், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு சசிகலா சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அ.தி.மு.க,வில் மீண்டும் சண்டை களைகட்ட துவங்கி உள்ளது.

