தனியார் பராமரிப்பில் 'சப் - ஸ்டேஷன்' தொழில் துறையினர் வரவேற்பு
தனியார் பராமரிப்பில் 'சப் - ஸ்டேஷன்' தொழில் துறையினர் வரவேற்பு
ADDED : பிப் 24, 2024 07:28 PM
சென்னை:தமிழகத்தில் துணைமின் நிலையம் அமைத்து, பராமரிக்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டதை, தொழில் துறையினர் வரவேற்றுஉள்ளனர்.
தமிழக மின்வாரியம், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக துணைமின் நிலையம் அமைக்கிறது. கட்டுமான பணி முடிந்ததும், மின் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். பின், இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை மின்வாரியமே மேற்கொள்கிறது.
இந்த சூழலில், 200 கோடி ரூபாய்க்கு மேல் திட்ட செலவு உடைய துணைமின் நிலையங்கள், மின் வழித்தடங்களுக்கான, 'டெண்டரில்' தேர்வாகும் நிறுவனங்களே, அவற்றை அமைத்து, பராமரிக்கும் வகையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதற்கு, தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:
காற்றாலை மின் நிலையங்கள் இணைக்கப்பட்டு உள்ள துணைமின் நிலையங்களில், முறையான பராமரிப்பு இல்லை.
அடிக்கடி பழுது ஏற்படுவதால், மின்சாரம் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. அதேசமயம், ஒரு மெகாவாட்டிற்கு ஆண்டுக்கு பராமரிப்பு கட்டணமாக, 2 லட்சம் ரூபாயை மின்வாரியம் வசூலிக்கிறது.
தனியார் துணை மின் நிலையம் அமைத்து, பராமரிக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கக்கூடியது. இதனால், நிறுவனங்களுக்குள் போட்டி ஏற்பட்டு, நுகர்வோருக்கு சிறப்பான சேவை கிடைக்கும். உற்பத்தியான மின்சாரமும் வீணாகாமல் முழுதுமாக எடுத்து செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.