ADDED : பிப் 10, 2024 12:52 AM

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் தமிழகத்தில் தான் ஹிந்துக்கள் மனம் புண்படும் வகையில், நாத்திகவாதிகள் ஹிந்து மதக் கடவுள்களையும், ஹிந்து மதக் கலாசாரத்தையும் கேலியும், கிண்டலும் செய்வது வழக்கத்தில் உள்ளது.
அதிலும் ஹிந்துக்கள் வணங்கும் கோவில்களின் எதிரிலேயே, கடவுள் நம்பிக்கை இல்லாத ஈ.வெ.ரா., சிலைகளை வைத்து அழகு பார்ப்பதும், கோவில்களுக்கு எதிரில் மேடை போட்டு, ஹிந்து கடவுள்களை கேவலமாக பேசுவதும் வழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், ஹிந்து அல்லாதோர், அனைத்து கோவில்களிலும் கொடி மரத்திற்கு அப்பால் செல்ல தடை விதித்துள்ளார்.
இது, ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ள ஆன்மிகவாதிகள் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. சிலர், கோவில்களை ஒரு சுற்றுலா தலமாக நினைத்ததன் விளைவு தான், அமைதியான வழிபாடுகளுக்கு தீங்கு விளைவித்தன.
தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் முதல் மற்ற மதத்தினர் அனைவரும் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல், கோவில்களுக்கு வந்து உண்மையான ஆன்மிகவாதிகளின் இறைவழிபாட்டுக்கு இடையூறு செய்கின்றனர்.
ஹிந்துக்கள், கோவில்களுக்கு செல்லும் நாட்களில் அசைவம் உண்பது இல்லை; பெண்கள், மாதவிலக்கான நாட்களில், கோவில்களுக்கு செல்வது இல்லை; குடும்பத்தில் ஒரு துக்க சம்பவம் நடந்தாலும், குறிப்பிட்ட நாட்கள் கோவிலுக்கு செல்வது இல்லை.
ஆனால், மற்ற மதத்தினர் இதையெல்லாம் கடைப்பிடிக்காமல், கோவில்களுக்குள் சுதந்திரமாக வலம் வருவது சரியல்ல. இதற்கு முடிவு கட்டும் வகையில், நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பு அமைந்துள்ளது.
நீதிபதி ஸ்ரீமதி கூறியிருப்பது போல, 'ஹிந்து கோவில்கள், அதன் பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை பாதுகாக்க வேண்டியது, அறநிலையத் துறையின் கடமை' என்று கூறியுள்ளதை, அத்துறை அதிகாரிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.