அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் சரியில்லை: எச்சரிக்கிறார் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா
அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் சரியில்லை: எச்சரிக்கிறார் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா
ADDED : அக் 20, 2024 01:25 AM

சென்னை: 'அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புகளில் குறைபாடுகள் இருப்பதால், அவற்றை சரிசெய்ய வேண்டும்' என, மருத்துவமனை முதல்வர்களுக்கு, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு உத்தரவிட்டு உள்ளார்.
இதுகுறித்து, அனைத்து மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர்களுக் கும், செயலர் சுப்ரியா சாஹு அனுப்பியுள்ள கடிதம்:
அரசு மருத்துவமனைகளில் சமீபத்தில் நடத்திய ஆய்வில், பல்வேறு குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, கழிப்பறைகள் அசுத்தமாக காணப்படுகின்றன. நோயாளிகள் பயன்படுத்தும் நாற்காலிகள், சக்கர நாற்காலிகள், காத்திருப்பு மேஜைகள் உடைந்தும், சேதமடைந்தும், துருப்பிடித்த நிலையிலும் உள்ளன.
மேலும், நோயாளிகள் நலனுக்காக, அரசு சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் உரிய ஒருங்கிணைப்பு இல்லாததாலும், அதற்கான உரிமம் பெறப்படாததாலும், பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன.
நடவடிக்கை
மருத்துவமனைக்கு வரும் நோயாளியிடமிருந்து, மற்றொரு நோயாளிக்கு கிருமி தொற்று ஏற்படாதவாறு, பாதுகாப்புடன் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதிப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் அவசியம். நோயாளிக்கு வழங்கப்படும் உணவின் சுகாதாரத்தையும், தரத்தையும் மேம்படுத்த வேண்டும்.
சமையல் கூடங்களில் மாதந்தோறும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
சுகாதாரமான குடிநீர் வழங்குவதுடன், நீர்த்தேக்க தொட்டிகள் துாய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் உள்ளிட்டவை தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், உயிரி மருத்துவ கழிவு மேலாண்மையை செயல்படுத்துவது அவசியம். மருத்துவ மனைகள் சுகாதாரமாக இருப்பதுடன், மற்ற கழிவு தேங்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
குழந்தைகள், கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோருக்கு, சக்கர நாற்காலிகள் உள்ளிட்டவை வாயிலாக, அவர்களை அழைத்து செல்வதற்கு, உதவியாளர்களையும் நியமிக்க வேண்டும்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்திலும், பல்வேறு குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக, பெண் காப்பகவாசிகள், தங்களது முடியை கூட சரியாக திருத்தம் செய்யாமல் இருப்பதை பார்க்க முடிந்தது. இதன் வாயிலாக, அவர்களை முறையாக பராமரிக்காதது தெரியவருகிறது.
கடிதம்
அதேபோல, பெண்களுக்கான உள்ளாடை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்கப்படாமல் உள்ளன. அங்கு, உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அவர்களுக்கான வசதிகள் மற்றும் போதியளவில் ஆடைகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மருத்துவ கல்வி ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணிக்கும், சுப்ரியா சாஹு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள், சுகாதாரம், உணவு தரம் ஆகியவற்றை மாதம் ஒரு முறை கண்காணித்து, அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்' என்று, தெரிவித்துள்ளார்.