சபாஷ், சரியான போட்டி; மோதலில் ஈடுபட்ட காங்கிரஸ் மேயர், தி.மு.க., கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி
சபாஷ், சரியான போட்டி; மோதலில் ஈடுபட்ட காங்கிரஸ் மேயர், தி.மு.க., கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி
ADDED : டிச 31, 2024 11:00 AM

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் மேயர் சரவணன், தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நெஞ்சுவலிப்பதாக கூறிய மேயர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு உள்ளார். தற்போது, தான் தாக்கப்பட்டதாக கூறி, தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
கும்பகோணம் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வருகிறார் சரவணன். தமிழகத்தில் காங்., கட்சியின் ஒரே மேயரான இவருக்கும், தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நேற்று (டிச.,30) நடைபெற்றது. இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 54 தீர்மானங்களுக்கான கோப்புகளை தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி கேட்ட போது, கூட்டம் முடிந்துவிட்டதாகக் கூறிய மேயர், அவரது அறைக்குச் செல்ல முயன்றார். இதனையறிந்து வேகமாக ஓடிச்சென்ற தட்சிணாமூர்த்தி, மேயர் அறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மேயர் சரவணன் திடீரென மாமன்ற அலுவலகத்தின் தரையில் படுத்தபடி, தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டதாக அலறினார்.
இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (டிச.,31) 'தான் தாக்கப்பட்டதாக கூறி, தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். காங்கிரஸ் மேயர் சரவணன், தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரும், போட்டி போட்டு கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.