3 ஆண்டுகளில் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? ஸ்டாலினுக்கு இ.பி.எஸ்., கேள்வி
3 ஆண்டுகளில் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? ஸ்டாலினுக்கு இ.பி.எஸ்., கேள்வி
ADDED : ஏப் 06, 2024 05:43 PM

திருச்சி: ‛‛ மூன்று ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் என்ன?'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.
திருச்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: ‛ இண்டியா' கூட்டணி பெயரளவுக்கு தான் உள்ளது. அக்கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் யாருமில்லை. தேர்தல் நேரத்தில் ஒருங்கிணைப்பு இல்லாதவர்கள், தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளரை எப்படி தேர்வு செய்யப்போகின்றனர். அக்கூட்டணிக்கு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார். தமிழகத்தில் செல்வாக்கு இழந்த ஸ்டாலின், ‛ இண்டியா' கூட்டணி என்ற போர்வையில் தேர்தலை சந்திக்கிறார்.
தி.மு.க., உடன் சேர்ந்து சிலர் கட்சியின் சின்னத்தை முடக்க முயற்சி செய்தனர். ஆனால், அது வெற்றி பெறவில்லை. பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகியது ஸ்டாலினுக்கு எரிச்சல் ஏன்? ஆட்சி அதிகாரம் முக்கியம் எனில் பா.ஜ., கூட்டணியிலேயே இருந்து இருப்போம். ஆனால், எங்களுக்கு மக்கள் நலனே முக்கியம். மரத்திற்கு மரம் தாவுவது போல் பா.ஜ., காங்கிரஸ் என அக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியில் இருந்தது தி.மு.க., 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் தி.மு.க., தமிழகத்திற்கு செய்தது என்ன. மத்தியில் , மாநிலத்தில் எங்கு ஆட்சியில் இருந்தாலும் தி.மு.க., கொள்ளை அடிப்பார்கள். மத்தியில் ஆட்சி அமைத்து பல்லாயிரகணக்கான கோடி கொள்ளையடிக்க தி.மு.க., திட்டமிட்டு உள்ளது.
10 ஆண்டுகள் பொற்கால ஆட்சியை அ.தி.மு.க., அளித்தது. ஆனால், மூன்று ஆண்டு கால ஆட்சியில் தி.மு.க., என்ன செய்தது என மக்கள் கேட்கிறார்கள். பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டாலின், உதயநிதியிடம் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஓடுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் என்ன நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து ஸ்டாலின் மக்களிடம் கேட்டால் பதில் சொல்வார்கள்.மூன்று ஆண்டில் 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது தான் தி.மு.க., ஆட்சியின் சாதனை. கடன் வாங்கியும் என்ன திட்டம் துவக்கினீர்கள். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக செயல்படும் கட்சி அ.தி.மு.க., தான்.
செல்லும் இடமெல்லாம் அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் சீரழிக்கப்பட்டது என ஸ்டாலின் சொல்கிறார். ஆதாரம் இல்லாமல் அ.தி.மு.க., ஆட்சி இருண்ட காலம் என சொல்லி வருகிறார். நாங்கள் எப்படி சீரழித்தோம் என சொல்லும் முதல்வர் அதற்கான ஆதாரத்தை வெளியிட முடியுமா? ஆதாரத்தை வெளியிட்டால் ஸ்டாலினுக்கு பதில் தர முடியும். அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியல் இட நான் தயாராக உள்ளேன்.
தமிழகத்தில் விலைவாசி ஏறிவிட்டது. மக்களின் வாழ்க்கை தரம் கேள்விக்குறியாகிவிட்டது. மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தி தமிழகத்தை நாசமாக்கியது தி.மு.க., இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.

