ADDED : ஜன 25, 2024 12:56 AM
சென்னை:கோவில்களின் வரவு, செலவு விபரங்களை தற்போது தணிக்கை செய்பவர்களின் கல்வி தகுதி என்ன என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களின் வரவு, செலவு விபரங்களை, தனிப்பட்ட பட்டய கணக்காளரை நியமித்து, தணிக்கை மேற்கொள்ளக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த, 'இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட்' தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர், 2020ல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்தாண்டு பிப்., வரை, கோவில் தணிக்கையில், நிலுவையில் உள்ள தணிக்கை ஆட்சேபனைகள், 18.69 லட்சம் என்று மாநில அரசின் தலைமை கணக்கு இயக்குனர் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது என, தெரிவிக்கப்பட்டது.
அப்போது,'கோவில்களில் வரவு, செலவு விபரங்களை தற்போது தணிக்கை செய்பவர்களின் கல்வி தகுதி என்ன?' என்று, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஹிந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், ''கல்வித்தகுதி, அது தொடர்பான அரசாணை உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார்.
அதை ஏற்ற நீதிபதிகள், கோவில்களில் தணிக்கை செய்பவர்களின் கல்வி தகுதி உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்ய, அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.