ADDED : ஏப் 26, 2025 01:57 AM

சென்னை: 'பதினைந்து நாட்களுக்குள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமன பட்டியலை ஒப்படைக்க வேண்டும்' என, மாவட்டச் செயலர்களுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:
பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், 234 தொகுதிகளில், 90 சதவீதம் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதை தெரிவித்தனர். பதினைந்து நாட்களுக்குள் அப்பணியை முடித்து, தலைமை நிலையத்தில் அதற்கான பட்டியலை மாவட்டச் செயலர்கள் ஒப்படைக்க வேண்டும்.
கட்சி நிர்வாகிகள் அச்சிடும் 'போஸ்டர்'கள், 'டிஜிட்டல் பேனர்'கள், பத்திரிகை விளம்பரங்களில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் சிறியதாக இடம்பெறுவது வேதனை அளிக்கிறது. என் படத்தை வேண்டுமானால் சிறிதாக போடலாம். ஏனெனில், கட்சியில் நானும் சாதாரண தொண்டர்தான்.
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க, தலைமையில் அமைந்துள்ளது வெற்றிக் கூட்டணி; யாரும் கவலைப்பட வேண்டாம். நடக்கவுள்ள செயற்குழு கூட்டத்தில், ஆக்கப்பூர்வமான கருத்துகளை மட்டும் தெரிவிக்க வேண்டும். கூட்டணி தொடர்பான கருத்துகளை யாரும் பேச வேண்டாம்.
தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மே 2ம் தேதி நடக்கவுள்ள அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் மற்றும் பேச வேண்டிய விஷயங்கள் குறித்தும் மாவட்டச் செயலர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

