வழக்கறிஞரை விசிகவினர் தாக்கிய போது போலீசார் என்ன செய்தனர்: ஐகோர்ட் கேள்வி
வழக்கறிஞரை விசிகவினர் தாக்கிய போது போலீசார் என்ன செய்தனர்: ஐகோர்ட் கேள்வி
ADDED : அக் 17, 2025 05:56 PM

சென்னை: சென்னையில் வழக்கறிஞரை விசிகவினர் தாக்கிய போது, அங்கிருந்த போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர் என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நுழைவாயில் வெளியே, கடந்த 7ஆம் தேதி, வழக்கறிஞர் ராஜிவ் காந்தியின் இரு சக்கர வாகனம் மீது, வி.சி.க., தலைவர் திருமாவளவன் கார் மோதியது. இவ்விவகாரத்தில், வழக்கறிஞர் ராஜிவ் காந்தியை, வி.சி.க.,வை சேர்ந்தவர்கள் தாக்கி காயப்படுத்தினர். அவரது வாகனத்தையும் சாலையில் தள்ளி சேதப்படுத்தினர்.
தற்காப்புக்காக, பார் கவுன்சில் அலுவலகத்தில் நுழைந்தவரை, உள்ளே நுழைந்த வழக்கறிஞர்கள் சிலர், சரமாரியாக தாக்கியதுடன், பார் கவுன்சில் பொருட்களையும் சேதப்படுத்தினர். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. சம்பவம் தொடர்பாக, இரு தரப்பிலும் தரப்பட்ட புகார்கள் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து நடவடிக்கை கோரி பார் கவுன்சில் இணைத்தலைவரான வழக்கறிஞர் கே. பாலு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், 'குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரு தரப்பினர் மீதும் எதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று கேள்வி எழுப்பினார்.
'இந்தச் சம்பவத்தை பார்த்துக் கொண்டு இருந்த அரசியல் கட்சித் தலைவர் சம்பவத்தை கட்டுப்படுத்தாமல் பிரச்னையை தூண்டும் விதத்தில் செயல்பட்டாரா? கட்சியினர் தாக்கிய போது போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தனர்' என்றும் நீதிபதி சதீஷ் குமார் கேள்வி எழுப்பினார்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.