ADDED : ஜன 09, 2025 06:51 AM

சென்னை : சட்டசபைக்கு வெளியே, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி அளித்த பேட்டி:
சட்டசபையில் அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதற்கு பதில் அளித்த முதல்வர், பெண்கள் பாதுகாப்பு மற்றும் அண்ணா பல்கலையில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து, பெரிய அளவில் கவனம் எடுத்து, அரசு செயல்படுவதை குறிப்பிடாமல், சம்பந்தமே இல்லாமல், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து அதிகம் பேசினார்.
அந்த வழக்கு தொடர்புடைய நபர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என, முடித்துக் கொண்டார். மகளிர் உரிமைத்தொகை கொடுப்பதாக, சம்பந்தமே இல்லாமல் பதில் அளித்துள்ளார்.
மகளிருக்கு உரிமைத் தொகை கொடுத்தால், பாலியல் சம்பவத்தில் பாதுகாப்பு கிடைத்து விடும் என முதல்வர் நினைக்கிறாரா?
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக, பாலியல் கொடுமைகள் அதிகரிக்கின்றன. இதை அரசியல் செய்ய வேண்டாம் என, ஒரு சில கூட்டணி கட்சிகள் கூறுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குரல் கொடுப்பது அரசியல் என்றால், அந்த அரசியலை பா.ஜ., செய்யும்.
பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாதிப்பு இல்லை என்பதை சுட்டிக்காட்ட, போராட்டம் நடத்த, அரசியல் கட்சிக்கு உரிமை உள்ளது. இதை அரசியல் செய்ய வேண்டாம் எனக் கூற, எந்த அருகதையும் கிடையாது.
தமிழகம் மத்திய அரசிடம் இருந்து, நிர்பயா நிதி எவ்வளவு வாங்குகிறது, எவ்வளவு செலவு செய்துள்ளது, பெண்கள் பாதுகாப்புக்கு என்ன முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது என எதையும் குறிப்பிடாமல், பொத்தாம் பொதுவாக நடவடிக்கை எடுப்போம் எனக் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது.
தி.மு.க., அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நாளும் பெண்கள் பாதிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கின்றனர்.
தி.மு.க.,வில் சாதாரண அனுதாபியாக இருப்பவர், சக்தி வாய்ந்த அமைச்சர்களோடு நெருக்கமாக புகைப்படம் எடுக்க முடியுமா? சாதாரண அனுதாபி இத்தனை குற்ற வழக்குகளோடு, அமைச்சரோடு நெருக்கமாக இருக்கிறார் என்றால், கட்சியில் 'பவர்புல்' பதவி இருந்தால், அவர்களை நெருங்க முடியுமா?
காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பொது இடங்களில், பெண்களுக்கு பாலியல் கொடுமை நடக்கிறது. அதற்கு முதல்வர்தானே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்

