ADDED : அக் 28, 2024 01:14 AM
தமிழக வெற்றிக்கழக மாநாட்டில், கட்சியின் பெயர் மற்றும் கொடி குறித்து, கட்சியின் தலைவர் விஜய் குரல் பின்னணியில் ஒலிக்கும், 'வீடியோ' வெளியிடப்பட்டது.
அதில், விஜய் கூறியதாவது:
தமிழகம் என்றால், தமிழர்கள் வாழும் இடம். இது, இலக்கியங்களில் இடம் பிடித்த வார்த்தை. மக்களுக்கு அடையாளத்தை கொடுக்கிறது என்பதால், தமிழகம் என்ற வார்த்தை கட்சியின் முதல் எழுத்தாக உள்ளது. அரசியலில் மட்டும் அல்ல, பொதுவாகவே நமக்கு ஒரு பெரிய அடையாளம் இருக்க வேண்டும். அதற்கு நம் பெயரே, ஒரு அடையாளமாக இருக்க வேண்டும்.
அப்படி ஒரு நேர்மறை அர்த்தம், அடர்த்தி, அதிர்வு மற்றும் வலிமையை கொண்ட மந்திரச் சொல்லாக, 'வெற்றி' என்ற சொல் இருக்கிறது. எனவே, கட்சி பெயரின் இரண்டாவது வார்த்தையாக சேர்க்கப்பட்டு உள்ளது. கழகம் என்றால், படைகள் பயிற்சி பெறும் இடம். கட்சியின் இளம் சிங்கங்கள், அரசியல் பயிலும் இடம் தான் கழகம் என்பதால், அதை மூன்றாவது வார்த்தையாக சேர்த்துள்ளோம்.
கொடியில் இருக்கும் அடர் ரத்த சிவப்பு நிறம், புரட்சியின் குறியீடு. இது கட்டுப்பாடு, பொறுப்புணர்வு, சிந்தனை திறன் மற்றும் செயல் தீவிரத்தை குறிக்கிறது. மகிழ்ச்சி, நம்பிக்கை, லட்சியம், மனத்தெளிவு, உற்சாகம், ஆற்றல் மற்றும் நினைவாற்றலை துாண்டி, இலக்கை நோக்கி உறுதியுடன் ஓட வைப்பதை மஞ்சள் நிறம் குறிக்கிறது. இதை மனதில் வைத்து, அந்த நிறங்கள் கட்சிக் கொடியில் சேர்க்கப்பட்டு உள்ளன.
'வாகை மலர்' என்றால் வெற்றி; அரச வாகை என்றால், அரசனின் வெற்றி. இது, மக்களுக்கான வெற்றிக்கானது; மண்ணின் வெற்றியை சொல்வது என்பதால், வாகை மலர், கொடியில் இடம் பெற்றுள்ளது. மிகப்பெரிய பலத்தை, யானை பலம் என்பர். தன் நிறத்திலும், குணத்திலும், உருவத்திலும், உயரத்திலும் எப்போதும் யானை தனித்தன்மை உடையது.
குறிப்பாக, போர் யானை தன்னிகரற்றது. போர் தந்திரம் பழகிய யானைகள், எதிரிகளை போர்க்களத்தில் பீதியடைய வைத்து, பிடரியில் அடிக்க ஓட வைக்கும். அப்படிப்பட்ட, போர் முனையில் இருக்கும் இரட்டை போர் யானைகள், கொடியில் உள்ளன. இந்த யானைகள், மதம் பிடித்த யானைகளை, கும்கி யானைகள் போல அடக்கி விடும். இது புரிய வேண்டியவர்களுக்கு தெளிவாக புரியும்.
கொடியின் நடுவில் உள்ள வாகை மலரை சுற்றி, கட்சி வென்றெடுக்க வேண்டிய செயல் திட்டங்களை குறிக்கும் வகையில், 28 நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றை பச்சை மற்றும் நீல வண்ணத்தில் அமைத்துள்ளோம். இது, சமூக நல்லிணக்கம், அமைதிப்பூங்காவை குறிக்கும். தமிழ் மண்ணின் வெற்றிக் குறியீடாக மாறி, தமிழக வெற்றிக்கழக கொடி பட்டொளி வீசி பறக்கும். இதை தமிழக மக்கள் அனைவரும் ஏந்தப்போவது நிச்சயம்.
இவ்வாறு விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

