திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு: சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம்
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு: சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம்
UPDATED : ஜூலை 01, 2025 08:02 PM
ADDED : ஜூலை 01, 2025 06:56 PM

சென்னை: மடப்புரம் கோவில் காவலாளி போலீஸ் விசாரணையின் போது அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி போலீஸ் விசாரணையின் போது அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஐகோர்ட் மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அஜித்குமாரின் குடும்பத்தினரை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் பெரிய கருப்பன் மொபைல்போன் மூலம் அஜித்குமார் தாயார் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தாயாரிடம் ஸ்டாலின் பேசுகையில், 'ரொம்ப 'சாரி'மா. தைரியமா இருங்கள். 'ஆக்சன்' எடுக்க சொல்லி உள்ளேன். சீரியசா 'ஆக்சன்' எடுக்க சொல்லியுள்ளேன். என்ன செய்யணுமோ செய்ய சொல்றேன். மந்திரி பார்த்து கொள்வார். தைரியமாக இருங்கள். உங்களை அழைத்தில் மகிழ்ச்சி' என்றார்.
தொடர்ந்து அஜித்குமார் சகோதரரிடம் பேசிய ஸ்டாலின், ' வணக்கம் தம்பி. நடக்கக்கூடாதது நடந்து விட்டது. தைரியமா இருங்கள். 'ஆக்சன்' எடுக்க சொல்லியுள்ளேன். என்ன பண்ணணுமோ அமைச்சரிடம் சொல்லி செய்ய சொல்லயுள்ளேன். தைரியமாக இருங்கள். சம்பவம் நடந்ததும் நடவடிக்கை எடுத்துள்ளோம். கைது செய்துள்ளோம். செய்ய வேண்டியதை செய்து கொடுக்க சொல்கிறோம். நடந்ததை யாராலும் ஏற்க முடியாது. ஒத்துக்க முடியாது. தண்டனை பெற்று தருவோம்,' எனக்கூறினார்.
இதனைத் தொடர்ந்து இந்த வீடியோவை 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அத்துடன் கூறியுள்ளதாவது: திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு!கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்! இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலன் கூறியுள்ளார்.
மாற்றம்
இதனிடையே முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28ம் தேதி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், திருப்புவனம் போலீஸ் ஸ்டேசனில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
விசாரணையின் போது போலீசார் நடத்திய தாக்குதல்தான் மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல்.இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட 6 போலீசார் உடனடியாகச் சம்பவம் நடந்த அன்றே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
5 போலீசார் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது. மாவட்ட எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். டி.எஸ்.பி., பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்துக்கப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தச் சம்பவத்தில் போலீசைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான சந்தேகமும் எற்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிட்டுள்ளேன். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கும்.இதுபோன்ற மீறல் சம்பவங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை. தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திடும் என நம்பி போலீசாரை நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிடும் வகையில் போலீசார் எப்போதும் செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.