UPDATED : பிப் 22, 2024 02:53 AM
ADDED : பிப் 21, 2024 11:43 PM

சென்னை:''லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து, விரைவில் நல்ல செய்தி சொல்லப்படும்,'' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில், மக்கள் நீதி மையம் கட்சியின், ஏழாம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. கொடி ஏற்றி வைத்து, கமல் இனிப்புகள் வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சு நடக்கிறது. அதை தற்போது வெளிப்படையாக சொல்ல முடியாது. விரைவில் நல்ல செய்தி சொல்லப்படும்.
இந்த தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி ஆலோசித்து வருகிறோம். அது பற்றியும் விரைவில் அறிவிக்கப்படும்.
கட்சி துவங்கிய ஆறு ஆண்டுகளில் எதை செய்யக் கூடாது என்பதையும், மற்றவர்கள் செய்யாமல் மறந்தது எது என்பதையும், நியாயமான விஷயங்களை யார் சொல்லாமல் விட்டனர் என்பதையும் கற்றுக் கொண்டோம்.
எங்கள் நேர்மையை கருத்தில் வைத்து, தேர்தல் கமிஷன், 'டார்ச்லைட்' சின்னம் ஒதுக்கி உள்ளது.
தேர்தல் பத்திரங்களை நாங்கள் வாங்கியது இல்லை. திருடிய பணத்தில் கட்சி நடத்தவில்லை. சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறோம்.
துாசு படிந்து கிடந்த கிராம சபை கூட்டங்களை தட்டி எழுப்பி உள்ளோம். அதுவும் எங்களது மிகப்பெரிய சாதனை தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, தொண்டர்களிடம் பேசுகையில், ''நான் கோவை தெற்கு தொகுதியில், 1,728 ஓட்டுகள்வித்தியாசத்தில் தோல்விஅடைந்ததாக கூறுகின்றனர். தோற்றது நான் அல்ல;ஜனநாயகம்,'' என்றார்.