டங்ஸ்டன் விவகாரத்தில் என்ன நடக்கிறது? முதல்வர் விளக்கம் அளிக்க பன்னீர் கோரிக்கை
டங்ஸ்டன் விவகாரத்தில் என்ன நடக்கிறது? முதல்வர் விளக்கம் அளிக்க பன்னீர் கோரிக்கை
ADDED : டிச 03, 2024 07:17 PM
சென்னை:'டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில், தி.மு.க., அரசு இரட்டை வேடம் போடுகிறது. அமைச்சர் துரைமுருகன், மத்திய கனிம வளத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தின் நகலை வெளியிட வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:
மதுரை மாவட்டம், மேலுார் தாலுகா, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் அமைக்கப்பட்டால், சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும். இதற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கான செயல்முறைகள் நடந்தபோது, தி.மு.க., சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை. பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி, முதல்வர் தாமதமாக, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
முதல்வர் எழுதிய கடிதத்தில், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் 2023 அக்., 3ம் தேதி, மத்திய கனிம வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி, தமிழகத்தின் கவலையை தெரிவித்ததாகவும், நாட்டின் நன்மையை சுட்டிக்காட்டி, அதை கடிதம் வாயிலாக, மத்திய கனிமவளத் துறை அமைச்சர் நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
நீர்வளத் துறை அமைச்சர் எழுதிய கடிதத்தின் நகலை, மக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பாக, கடந்த மாதம் 7 ம் தேதி வரை, தமிழக அரசு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு தி.மு.க.,வின் உரிய பதில் என்ன என்பதை அறிய தமிழக மக்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இதன் பின்பாவது, இந்த விஷயத்தில் நடப்பது என்ன என்பது குறித்து, முதல்வர் தெளிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.