எம்.ஜி.ஆர்., ஓட்டுக்களை குறிவைக்கும் பா.ஜ., அண்ணாமலை அறிக்கைக்கு பின்னணி என்ன?
எம்.ஜி.ஆர்., ஓட்டுக்களை குறிவைக்கும் பா.ஜ., அண்ணாமலை அறிக்கைக்கு பின்னணி என்ன?
ADDED : டிச 24, 2024 10:23 PM
சென்னை:அ.தி.மு.க.,வில் உள்ள எம்.ஜி.ஆர்., விசுவாசிகளின் ஆதரவை பெறும் நோக்கில், அவரை புகழந்து மூன்று பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
பா.ஜ., ஆதரவாளர்களாக இருந்தாலும், அ.தி.மு.க., பொதுச்செயலராக, ஜெயலலிதா இருந்த வரை, அக்கட்சிக்கே பலரும் ஓட்டளித்து வந்தனர். பா.ஜ., ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போட்டியிட்டால், அந்த ஓட்டுக்கள் அப்படியே தங்களுக்கு கிடைக்கும் என, அ.தி.மு.க., நிர்வாகிகளே நம்பினர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. தமிழக பா.ஜ.,வுக்கும் வலுவான தலைமை கிடைத்தது. மாநில தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா பாணியில் தி.மு.க., மற்றும் அக்கட்சி தலைவர்களின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து, இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும், பா.ஜ., தலைமையில் தனி கூட்டணி அமைத்தார். இதனால், பா.ஜ.,வினர் ஓட்டுக்கள் மட்டுமின்றி, ஜெயலலிதா இருந்தவரை, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்த பலரும் பா.ஜ., பக்கம் திரும்பினர்.
இதன் காரணமாகவே, பல தொகுதிகளில் பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் இரண்டாம் இடத்தை பிடித்தன. இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.,வில் உள்ள எம்.ஜி.ஆரின் விசுவாசிகளின் ஓட்டுக்களையும் பா.ஜ., வளைக்க தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக, எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தை முன்னிட்டு, காமராஜ் உடன் எம்.ஜி.ஆரை ஒப்பிட்டும், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட திட்டங்களை விவரித்தும், அண்ணாமலை, மூன்று பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கு, அ.தி.மு.க., தொண்டர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தாங்க முடியாமல் தான், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அண்ணாமலையை இந்த விவகாரத்தில் காட்டமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.