தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? ஆசிரியர்கள் போராட்டம் நீடிப்பு!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? ஆசிரியர்கள் போராட்டம் நீடிப்பு!
ADDED : மார் 06, 2024 12:42 AM
சென்னை:தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, 16வது நாளாக ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அரசு பள்ளிகளில், 2009 ஜூன் 1க்கு முன் நியமிக்கப்பட்டவர்களை போல, அதற்குபின் நியமிக்கப்பட்ட தங்களுக்கும், அடிப்படை ஊதியம் வேண்டும் என, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
இந்த சங்கம் சார்பில், கடந்த மாதம் 19ம் தேதி முதல், மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்படுகிறது. தேர்வு காலம் என்பதால், போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பும்படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், தி.மு.க., அளித்த தேர்வு வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என, ஆசிரியர் சங்கம் உறுதியாக உள்ளது.
இந்நிலையில், நேற்று, 16ம் நாளாக சென்னையில் டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்டு, ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
ஆனால், தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என, ஆசிரியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

