ஆணவ கொலை தடுப்பு சட்டம் என்னாச்சு? கேள்வியால் முத்தரசன் திடீர் 'டென்ஷன்'!
ஆணவ கொலை தடுப்பு சட்டம் என்னாச்சு? கேள்வியால் முத்தரசன் திடீர் 'டென்ஷன்'!
ADDED : ஆக 14, 2025 07:08 AM

சென்னை : ஆணவ படுகொலையை தடுக்க, அரசு சிறப்பு சட்டம் இயற்ற முன்வராதது குறித்த கேள்வியால், இந்திய கம்யூனிஸ்ட் செயலர் முத்தரசன் திடீரென டென்ஷன் ஆனார்.
அவரது பேட்டி:
ராமரை முன்னிலைப்படுத்தி, கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலை சந்தித்தனர். எந்த தொகுதியில் ராமர் கோவில் கட்டப்பட்டதோ, அந்த தொகுதியில், பா.ஜ., தோல்வி அடைந்தது. அந்த பொதுத் தொகுதியில், ஒரு தலித் வேட்பாளர் வெற்றி பெற்றார்.
வைரமுத்து தனிப்பட்ட முறையில், ராமரை தவறாக பேசவில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவதை, நாங்கள் கண்டிக்கிறோம்.
பா.ஜ.,வுடன் பழனிசாமி சேர்ந்ததை, அ.தி.மு.க., தொண்டர்கள் ஏற்கவில்லை; ஒவ்வொருவராக விலகி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிருபர்கள் சந்திப்பில், 'ஆணவப் படுகொலையை தடுக்கும் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற, உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து, முதல்வர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
'கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில், நீங்கள் முதல்வரிடம் கேட்பீர்களா' என, முத்தரசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்வியால் டென்ஷன் அடைந்த முத்தரசன், ''சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என, நானும், சண்முகமும், திருமாவளவனும் முதல்வரை சந்தித்து மனு கொடுத்தோம். பரிசீலனை செய்வதாக, முதல்வர் கூறினார்.
''சட்டம் நிறைவேற்றப்படுமா என்பது குறித்து, முதல்வரிடம் நீங்கள் தான் கேட்க வேண்டும். கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் நான் கேட்க முடியாது. அது அரசியல் நாகரிகம் இல்லை. கூட்டணி என்பது வேறு; அரசியல் நாகரிகம் என்பது வேறு,'' என்றார்.