'டெண்டர்' விட்டு ஓராண்டுக்கு மேலாச்சு 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் என்னாச்சு?
'டெண்டர்' விட்டு ஓராண்டுக்கு மேலாச்சு 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் என்னாச்சு?
ADDED : நவ 07, 2024 01:44 AM

சென்னை:வீடுகளில் ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கெடுக்க உதவும், 'ஸ்மார்ட்' மீட்டர் திட்ட பணிக்கு, 'டெண்டர்' கோரப்பட்டு, ஓராண்டுக்கு மேலாகியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில், மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுப்பு' என்ற தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில் வீடுகளில் இரு மாதங்களுக்கு, ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர். தாமதமாக, குறைத்து கணக்கெடுப்பது உள்ளிட்ட முறைகேடுகள் நடக்கின்றன.
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும்' என்று, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்து, மூன்றரை ஆண்டுகளாகின்றன.
மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுக்க வசதியாக, ஆளில்லாமல் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
சோதனை ரீதியாக, சென்னை தி.நகரில், 1.24 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டன.
மாநிலம் முழுதும், 2.35 கோடி வீடுகள் உட்பட, 3.03 கோடி மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்துக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்டில் நான்கு தொகுப்புகளாக, 'டெண்டர்' கோரப்பட்டது.
ஒப்பந்த நிறுவனம், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது, தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்துவது, மென்பொருள் வடிவமைப்பு, பராமரிப்பு என, அனைத்து பணிகளையும் 10 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள வேண்டும்.
ஒரு தொகுப்பு டெண்டர் புள்ளி திறக்கப்பட்டதில், அதில் பங்கேற்ற நிறுவனங்கள் அதிக விலைப்புள்ளிகள் வழங்கியிருந்தன. இதுதொடர்பான விபரங்கள், தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டன. இன்னும், அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில், எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், 'மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுப்பு' என்ற தி.மு.க.,வின் வாக்குறுதி, வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.