'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் என்னாச்சு? ரூ.160 கோடியில் 11.50 லட்சம் சாதா மீட்டர் வாங்குது வாரியம்
'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் என்னாச்சு? ரூ.160 கோடியில் 11.50 லட்சம் சாதா மீட்டர் வாங்குது வாரியம்
ADDED : ஜூலை 06, 2025 03:17 AM

சென்னை: தமிழகத்தில் 3.04 கோடி, 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்த, 'டெண்டர்' கோரியுள்ள நிலையில், 11.50 லட்சம் ஒரு முனை, மும்முனை சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம் துவக்கியுள்ளது. இதனால், எதற்காக இந்த வீண் செலவு என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம் முழுதும் மின் பயன்பாட்டை கணக்கு எடுக்க, அனைத்து மின் இணைப்புகளிலும், 'ஸ்டேடிக் மீட்டர்' பொருத்தப்பட்டு உள்ளது. இந்த மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டு விபரத்தை, ஊழியர்கள் கணக்கெடுக்கின்றனர். இதில், தவறுகள் நடக்கின்றன.
எனவே, ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக மீட்டர் பொருத்தி, அதை பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 2023 இறுதியில் டெண்டர் கோரப்பட்டது.
டெண்டர் ரத்து
அதில் பங்கேற்ற நிறுவனங்கள், அதிக விலை கோரியதாகக் கூறி, இந்தாண்டு ஜனவரியில் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. பின், 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தி, அவற்றை 93 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, கடந்த பிப்ரவரியில் டெண்டர் கோரப்பட்டது.
இதில், நிறுவனங்கள் பங்கேற்க, இம்மாத இறுதி வரை அவகாசம் உள்ளது.
இந்நிலையில், தற்போது 160 கோடி ரூபாய் செலவில், ஒரு முனை பிரிவில் 8 லட்சம் மீட்டர்களும், மும்முனை பிரிவில் 3.50 லட்சம் மீட்டர்களும் வாங்க, தலா ஆறு நிறுவனங்களுக்கு பணி ஆணைகளை மின் வாரியம் சமீபத்தில் வழங்கியுள்ளது.
ஏற்கனவே, ஸ்மார்ட் மீட்டர் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதால், தற்போது வாங்கப்பட உள்ள மீட்டர்கள் வீணாகலாம் என்றும், அதற்கான செலவு தேவையற்றது என்றும் புகார் எழுந்துள்ளது.
அவகாசம்
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் தான், சாதா மீட்டர் கொள்முதல் குறைக்கப்பட்டது. ஆனால், ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் தொடர்பான சந்தேகங்களை நிறுவனங்கள் எழுப்புவதால், அதற்கு ஏற்ப டெண்டரில் பங்கேற்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால், டெண்டரில் தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்து பணிகளை துவக்கி, அனைத்து இணைப்புகளிலும் மீட்டரை மாற்ற, ஓராண்டுக்கு மேலாகும்.
அதேசமயம், புதிய மின் இணைப்பு கேட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதற்கு மீட்டர் அவசியம். எனவே தான், ஒருமுனை மற்றும் மும்முனை பிரிவுகளில், 11.50 லட்சம் மீட்டர்கள் வாங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.