ஜாதி சங்கங்களில் அரசின் நிலைப்பாடு என்ன: அரசு விளக்க ஐகோர்ட் உத்தரவு
ஜாதி சங்கங்களில் அரசின் நிலைப்பாடு என்ன: அரசு விளக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : பிப் 16, 2025 01:38 AM

சென்னை: 'சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ், ஜாதி சங்கங்களை பதிவு செய்ய முடியுமா' எனக் கேள்வி எழுப்பிய, சென்னை உயர் நீதிமன்றம், அதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு, சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:
'ஜாதி'யை மேம்படுத்தும் நோக்கத்துடன், சங்கம் துவக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. 'ஜாதி'யை நிலை நிறுத்துவதே, சங்கத்தின் நோக்கமாக இருந்தால், ஜாதி பெயரில், அந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும் என்ற விதியுடன், அந்த சங்கங்களை, தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
அரசியல் சாசனத்தின்படி, மக்கள் அனைவருக்கும் சங்கம் துவக்க உரிமை உள்ளது. ஆனால், ஜாதி பெயரில் சங்கம் துவக்க முடியுமா, ஜாதியை நிலை நிறுத்துவதை, அந்த சங்கம் இலக்காக கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
அறப்பணிகள், அறிவியல் காரணங்களுக்காக சங்கங்கள் துவக்கலாம். அதைத்தான் சங்கங்களின் பதிவு சட்டமும் சொல்கிறது.
அரசியல் சாசனம், ஜாதி அற்ற சமுதாயத்தை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், ஜாதி சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என, பிப். 19ம் தேதி தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது. இதுபோன்ற பல ஜாதி சங்கங்கள், ஆன்மிக மற்றும் அற நோக்கங்களுக்காக, பள்ளிகள், கல்லுாரிகள் நடத்தி வருகின்றன. இது, மிகவும் கவலை அளிக்கக்கூடியது.
ஏனெனில், இந்த ஜாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் நுழைவு வாயிலில், ஜாதி பெயருடன், பெயர் பலகைகள் உள்ளன. அங்கு செல்லும் ஆசிரியர், 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என, முதல் பாடமாக நடத்துவது பெரிய முரணாக உள்ளது.
இவ்விவகாரத்தில், அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து, தமிழக அரசு விளக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.