15 மாவட்ட பள்ளிகளின் நிலை என்ன? அறிக்கை அளிக்க அமைச்சர் உத்தரவு
15 மாவட்ட பள்ளிகளின் நிலை என்ன? அறிக்கை அளிக்க அமைச்சர் உத்தரவு
ADDED : டிச 04, 2024 06:11 AM

சென்னை: 'தமிழகத்தில், 'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட, 15 மாவட்ட பள்ளிகளின் நிலை குறித்து, உடனடியாக ஆய்வறிக்கை வழங்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.
15 மாவட்டங்கள்:
தமிழகத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள, 15 மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுடன், அங்குள்ள பள்ளிகளின் நிலை குறித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, அமைச்சர் மகேஷ் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அவர் கூறியதாவது: மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளையும், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவர்கள், நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட கண்காணிப்பாளர்கள், கட்டடங்களின் சேதம், விழுந்துள்ள மரங்கள் குறித்து ஆய்வு செய்து, உடனே தீர்வு காண்பதுடன், அது குறித்த அறிக்கையை, துறைக்கு அனுப்ப வேண்டும்.
தென்பெண்ணை ஆற்றின் நீரோட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் நிலையை ஆய்வு செய்து, மின் இணைப்புகளை சரி செய்ய வேண்டும். பள்ளிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மாணவர்களின் புத்தகங்கள், சான்றிதழ்களின் சேதம் குறித்தும் அறிக்கை அனுப்ப வேண்டும்.
பள்ளிகளின் பாதுகாப்பு:
உண்டு உறைவிட பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்களை தொடர்புகொண்டு, அத்துறைகளின் பள்ளிகள், விடுதிகளின் நிலையை அறிந்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சேதமடைந்த விளையாட்டு மைதானங்களை சீரமைக்கவும், குப்பையை அகற்றவும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மாணவர்களின் தொடர் வருகைக்கு, இடையூறு இல்லாததையும், சுகாதாரமான குடிநீர் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால், மாணவர்கள் அதன் அருகே செல்லக்கூடாது என்பதை, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை செயலர் மதுமதி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.