மோசடி புகாரில் ரத்து செய்யப்பட்ட 1,100 பத்திரங்கள் நிலை என்ன?
மோசடி புகாரில் ரத்து செய்யப்பட்ட 1,100 பத்திரங்கள் நிலை என்ன?
ADDED : டிச 13, 2024 01:22 AM
சென்னை:மோசடி புகார்கள் அடிப்படையில், மாவட்ட பதிவாளர்கள் ரத்து செய்த, 1,100 பத்திரங்களின் நிலை குறித்து, பதிவுத்துறை முடிவு செய்ய வேண்டிய நெருக்கடி எழுந்துள்ளது.
தமிழகத்தில் அசல் உரிமையாளருக்கு தெரியாமல் ஆள்மாறாட்டம், போலி ஆவணங்களை பயன்படுத்தி, சொத்துக்கள் அபகரிக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்துள்ளன.
இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் விசாரணை முடிந்து, மோசடி பத்திரத்தை ரத்து செய்ய ஆணை பெற்று வர வேண்டும்.
இதனால், மோசடி பத்திரங்களை ரத்து செய்வதில் அபரிமிதமான தாமதம் ஏற்படுவதால், பதிவு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி மோசடி புகார்களை விசாரித்து, மாவட்ட பதிவாளர்களே பத்திரத்தை ரத்து செய்ய வழி செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்தம், 2022 ஆகஸ்ட், 16ல் அமலுக்கு வந்தது.
இதன் அடிப்படையில், 11,000 புகார்கள் பெறப்பட்டன. இதில், மாவட்ட பதிவாளர்கள் விசாரணை அடிப்படையில், 1,100 பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதேநேரத்தில், இந்தச் சட்டத்திருத்தம் வருவதற்கு முந்தைய காலத்தில் நடந்த மோசடிகளை விசாரிக்க முடியுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டத்திருத்தம் அமலாகும் தேதி குறித்த தெளிவு இல்லாததால், அதற்கு தடை விதித்தது. இதனால், மோசடி பத்திரங்கள் குறித்த புகார்கள் பெறுவதும், விசாரணை நடத்துவதும் நிறுத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில், ஏற்கனவே மாவட்ட பதிவாளர்கள் பிறப்பித்த உத்தரவுகள் தொடர்பான மேல் முறையீட்டை, பதிவுத்துறை ஐ.ஜி., விசாரிப்பதும் நிறுத்தப்பட்டது.
அத்துடன், இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்றம், மோசடி புகார் அடிப்படையில், மாவட்ட பதிவாளர்கள் பிறப்பித்த ரத்து ஆணையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், 1,100 பத்திரங்களுக்கான ரத்து ஆணையும் நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மோசடி பத்திர ரத்து சட்ட திருத்தத்துக்கு எதிராக, உயர் நீதிமன்றம் சில வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறோம்.
குறிப்பிட்ட சில புகார்களில், மாவட்ட பதிவாளர்களின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், 1,100 பத்திரங்களை ரத்து செய்த உத்தரவும் நீக்கப்படுமா என்பது குறித்து சட்ட ரீதியாக ஆராய்ந்து வருகிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தான், இதில் முடிவுக்கு வர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.