தெரு நாய்களை கட்டுப்படுத்த என்ன வழி உயர்நீதிமன்றம் கேள்வி
தெரு நாய்களை கட்டுப்படுத்த என்ன வழி உயர்நீதிமன்றம் கேள்வி
ADDED : பிப் 15, 2025 04:36 AM
மதுரை : தெரு நாய்களை கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து தமிழக தலைமைச் செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்று விபரம் பெற்று கால்நடைத்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் பாலாஜி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. ரோட்டின் குறுக்கே பாய்ந்து, வாகன விபத்தை ஏற்படுத்துகின்றன. நாய்கள் கடிப்பதால் பலர் ரேபிஸ் நோய் பாதிப்பிற்குள்ளாகினர். தெரு நாய்களின் இன விருத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாநக ராட்சிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி வி.லட்சுமிநாராயணன் அமர்வு விசாரித்தது.
மாநகராட்சி தரப்பு: நாய்களை கொல்ல சட்டம், விதிகளில் இடமில்லை. செல்லுார், வெள்ளக்கல் பகுதியில் கருத்தடை மையங்கள் உள்ளன. மாதந்தோறும் 500 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. மதுரையில் மார்ச் முதல்வாரம் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி துவங்கும். இதில் தன்னார்வலர்களாக கல்லுாரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர். அரசு போதிய நிதி ஒதுக்கினால் கூடுதல் கருத்தடை மையங்களை துவங்க, கால்நடை டாக்டர்களை நியமிக்க, உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு தரப்பு: தெருநாய்களை கட்டுப்படுத்த 2023-24ல் ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள்: தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ குடியிருப்போர் நலச்சங்கங்களின் உதவியை மாநகராட்சி நிர்வாகம் நாடலாம். கால்நடைத்துறை இயக்குனர் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யாதது திருப்தியளிக்கும் வகையில் இல்லை. தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து தமிழக தலைமைச் செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்று விபரம் பெற்று மார்ச் 7 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

