கேட்டது நட்சத்திரம்; கிடைத்தது பானை வி.சி.,க்கு மாநில கட்சி அங்கீகாரம்
கேட்டது நட்சத்திரம்; கிடைத்தது பானை வி.சி.,க்கு மாநில கட்சி அங்கீகாரம்
ADDED : ஜன 11, 2025 06:55 PM
சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், 'நட்சத்திரம்' சின்னம் கேட்டதற்கு, 'பானை' சின்னத்தை, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், 'உதயசூரியன், பானை' சின்னத்தில், வி.சி., போட்டியிட்டு வெற்றி பெற்றது. வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட்டதால், இரு தொகுதிகளையும் வென்றபோதும், கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கட்சியின் அங்கீகாரத்தை பெற, 2021 லோக்சபா தேர்தலில், பானை சின்னத்தில், அக்கட்சி போட்டியிட்டது. அதன்படி, திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். மாநிலத்தில் உள்ள லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கையில், 5 சதவீத தொகுதியை வென்ற கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கப்படும். அந்த அடிப்படையில், வி.சி.,யை மாநில கட்சியாக, இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
கடந்த காலங்களில், மோதிரம், நட்சத்திரம் போன்ற சின்னங்களில், வி.சி., போட்டியிட்டுள்ளது. குறிப்பாக, அவர்களின் கட்சி கொடியில் நட்சத்திர சின்னம் இடம்பெற்றுள்ளது. அதனால், நட்சத்திர சின்னத்தை பெற, வி.சி.,க்கள் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக மிசோரம் மாநிலத்தின், மிசோ தேசிய முன்னணி என்ற கட்சியின் வசமுள்ள நட்சத்திர சின்னத்தை பயன்படுத்த, வி.சி., துணை பொதுச் செயலர் எஸ்.எஸ்.பாலாஜி, முதன்மை செயலர் பாவரசு ஆகியோர், அக்கட்சியிடம் தடையின்மை சான்று பெற்று, தேர்தல் ஆணையத்திடம் வழங்கினர்.
ஆனால், தேர்தல் விதிகளின்படி, ஒரு கட்சியின் சின்னத்தை வேறு கட்சிக்கு வழங்க முடியாது என, தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.
இதுகுறித்து, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் வி.சி.,யை மாநில கட்சியாக அங்கீகரித்து, 'பானை' சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. கேட்டது நட்சத்திர சின்னம் என்றாலும், போட்டியிட்ட பானை சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதில் மகிச்சிதான். இந்த மகத்தான அங்கீகாரத்தை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி. தோழமை கட்சிகளுக்கு, குறிப்பாக தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.