எஸ்.இ.டி.சி.,யிடம் ஒப்படைக்கப்பட்ட தடங்களில் பஸ்கள் இயக்கம் எப்போது?
எஸ்.இ.டி.சி.,யிடம் ஒப்படைக்கப்பட்ட தடங்களில் பஸ்கள் இயக்கம் எப்போது?
ADDED : பிப் 23, 2024 02:37 AM
சேலம்: அ.தி.மு.க., ஆட்சியின் போது அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில், 300 கி.மீ.,க்கு மேல் இயக்கப்படும் பஸ்களை, எஸ்.இ.டி.சி., இயக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி சேலத்தில் இருந்து இயக்கப்பட்ட கோவில்பட்டி, சிவகாசி, மூகாம்பிகை; ஈரோட்டில் இருந்து நெல்லை, உடன்குடி; திருப்பூரில் இருந்து நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி.
சிக்கல்
கோவையில் இருந்து மார்த்தாண்டம், நாகர்கோவில், கன்னியாகுமரி உட்பட, பிற போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் இயக்கப்பட்ட, 90 பஸ்களின் தட பர்மிட், விரைவு போக்குவரத்துக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டன.ஆனால், எஸ்.இ.டி.சி., நிர்வாகம், அந்த தடங்களில் பஸ்களின் இயக்கத்தை துவங்கவில்லை.
மாறாக, அந்த நகரில் இருந்து ஏற்கனவே இயக்கப்பட்ட, எஸ்.இ.டி.சி., பஸ்களின் இயக்கம் மற்ற ஊர்களில் இருந்து இயக்கப்பட்டன.
குறிப்பாக, சேலத்தில் இருந்து நெல்லை, திருச்செந்துார், ராமநாதபுரத்துக்கு இயங்கிய பஸ்கள் ஓசூருக்கும், ஈரோடில் இருந்து இயங்கிய பஸ்கள் சத்தியமங்கலத்துக்கும், திருப்பூர், கோவையில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள், ஊட்டிக்கும் நீட்டிக்கப்பட்டன.
இதனால் விசேஷ நாட்கள், வார விடுமுறையில் தென் மாவட்ட தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு வந்து செல்வதில் சிக்கலுக்கு ஆளாகினர். அவர்கள், ஆம்னி பஸ்களை நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளனர்.
நடவடிக்கை இல்லை
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர் சம்மேளன, மாநில பொதுச்செயலர் பத்மநாபன் கூறியதாவது:
நாகர்கோவில், திருநெல்வேலி, காரைக்குடி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், கோவை மண்டலங்கள் சார்பில், 300 கி.மீ.,க்கு மேல் இயக்கப்பட்ட நெடுந்துார பஸ்களின் பர்மிட், அரசு உத்தரவுப்படி, எஸ்.இ.டி.சி.,யிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த தடங்களில், எஸ்.இ.டி.சி., நிர்வாகம் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை.அத்துடன், எஸ்.இ.டி.சி., சார்பில் அந்த தடங்களில் இயக்கப்பட்ட பஸ்களை தடம் நீட்டித்துவிட்டனர்.
இதனால் அந்த தடங்களில் ஆம்னி பஸ்கள் அதிகளவில் இயக்கி வருவாயை அள்ளிச்செல்கின்றன. மக்கள் நலன் கருதி பிற மண்டலங்கள் ஒப்படைத்த தடங்களில் பஸ்களை இயக்க எஸ்.இ.டி.சி., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் பிற கோட்டங்கள், ஒப்படைத்த தடங்களில் மீண்டும் பஸ்களை இயக்கி, பயணியருக்கு சேவை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.