புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது? அரசு மவுனம்: பஸ் ஊழியர்கள் அதிருப்தி
புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது? அரசு மவுனம்: பஸ் ஊழியர்கள் அதிருப்தி
ADDED : டிச 31, 2024 05:06 AM

சென்னை : போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அரசு தரப்பில் மறுதேதி அறிவிக்கப்படாமல் இருப்பது, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 1.23 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், அடுத்த ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
முதற்கட்ட முத்தரப்பு பேச்சு, சென்னை குரோம்பேட்டையில், கடந்த ஜூலை 27ல் நடந்தது. இரண்டாம் கட்ட பேச்சு, கடந்த 27, 28ம் தேதிகளில் நடக்க இருந்தது. ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 26ம் தேதி இறந்ததால், அரசு சார்பில் ஒரு வாரம் துக்கம் அறிவிக்கப்பட்டது. எனவே, முத்தரப்பு பேச்சு மறுதேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.
ஆனால், ஊதிய ஒப்பந்த பேச்சு மட்டும் நடத்தாமல் இழுத்தடிப்பது, போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
![]() |
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் பொதுச்செயலர் ஆறுமுகநயினார் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதில், அரசு தொடர்ந்து தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஜனவரி இறுதிக்குள் புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். பிப்ரவரி மாத சம்பளத்தில் புதிய ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தொழிற்சங்கங்கள் கூடி அடுத்தக்கட்ட போராட்டங்களை துவக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.