ADDED : ஜன 14, 2025 12:01 PM

சென்னை: ''பன்மடங்காக பெருகிவிட்ட தெருநாய்களை பிடித்து காப்புக்காடுகளில் விட வேண்டும். இல்லையெனில், கொரியா, சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடலாம்,'' என்பது தெருநாய்த் தொல்லையால் பாதிக்கப்பட்ட வாசகரின் கருத்தாக உள்ளது. தெருநாய்களின் தொல்லை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படாதவர்களே கிடையாது. பாதிக்கப்பட்ட வாசகரான ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன்,
ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அமெரிக்கா, துபாய், சவூதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில், 'லைசன்ஸ்' பெற்று வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் தவிர, தெருக்களில் நாய்களை பார்க்க முடியாது. நம் நாட்டிலோ, மனித உயிர்களை காட்டிலும், நாய்களின் உயிருக்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது!
சிறுவர் - சிறுமியர் முதல் முதியோர் வரை, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர்; வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.ஆனாலும், இதுவரை இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படவில்லை.கடந்த 1990களில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நாய்களை பிடித்து கொன்று விடும் வேலையை, உள்ளாட்சி அமைப்புகள் முறையாக செய்தது. இதன் காரணமாக நாய்கள் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தன.
விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினரின் எதிர்ப்பு காரணமாக, அத்திட்டம் கைவிடப்படவே, நாய்களுக்கான கருத்தடை திட்டத்தை அரசு கொண்டு வந்தது. இது சரியாக நடைமுறைப்படுத்தப்படாததால், தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காத வகையில் பெருகிவிட்டது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில், மக்கள் தொகையை மிஞ்சும் வகையில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும்.
இதைத் தவிர்க்க, தெரு நாய்களை பிடித்து கொல்ல வேண்டும் அல்லது காப்புக் காடுகளில் அவற்றை விட்டுவிட வேண்டும். இல்லையேல், மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்வது போல், நாய்களையும், வட கொரியா, தென் கொரியா, சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அன்னிய செலாவணி ஈட்டலாம்!
அரசு இதுகுறித்து யோசிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, பொதுநல வழக்காக கருதி விசாரித்து, அரசுக்கு உத்தரவிட வேண்டும்! இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.