பெண்கள் கூடினாலே புடவை, நகை பற்றிய கதை பேச துவங்கி விடுவர்: அமைச்சர் பன்னீர்செல்வம் கிண்டல்
பெண்கள் கூடினாலே புடவை, நகை பற்றிய கதை பேச துவங்கி விடுவர்: அமைச்சர் பன்னீர்செல்வம் கிண்டல்
ADDED : டிச 10, 2025 06:44 AM

கிருஷ்ணகிரி: “மாம்பழம் என்றாலே பிரச்னை தான். அது கட்சியாக இருந்தாலும் சரி, பழமாக இருந்தாலும் சரி,” என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், மாவட்ட பெண் விவசாயிகள் மாநாடு கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்றது. அதில், அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது:
பெண்களை வைத்து மாநாடு நடத்துவதே மிகக்கடினம். அவர்கள் ஒன்றுகூடினால், புடவை, நகை பற்றிய கதையை பேசத்துவங்கி விடுவர். ஆனால் இங்கு, பெண் விவசாயிகளை வைத்து மாநாடு நடக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ பிரச்னைக்கு முடிவு வேண்டும் என வலியுறுத்துகின்றனர். 'மாம்பழம்' என்றாலே பிரச்னைதான். மாம்பழத்தை சின்னமாக வைத்திருக்கும் கட்சியானாலும் சரி; மா விவசாயிகள், மாம்பழ வியாபாரிகள் ஆனாலும் சரி.
மாங்காய் விளைச்சல் மூன்று மடங்கு அதிகரித்ததால், விலை குறைந்து விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை கணக்கெடுத்து மத்திய அரசுக்கு அனுப்பினோம். இன்று வரை, இழப்பீடு தொகையை மத்திய அரசு வழங்கவில்லை.
திடீர் திடீரென கட்சிகள் உருவாவது போல, கிருஷ்ணகிரியில் திடீரென பெய்த மழையால், தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்து கடந்த ஆண்டு கடலுார் வெள்ளக்காடானது. தி.மு.க., அரசு உடனடி நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்கியது.
இவ்வாறு அவர் பேசினார்.

