வெள்ளத்தில் தப்பிய 93 முதலைகள் எங்கே? வனத்துறைக்கு விவசாயிகள் கேள்வி
வெள்ளத்தில் தப்பிய 93 முதலைகள் எங்கே? வனத்துறைக்கு விவசாயிகள் கேள்வி
ADDED : டிச 25, 2024 01:07 AM
சென்னை:சாத்தனுார் பண்ணையில் முதலைகள் எண்ணிக்கை குறைந்துள்ளதற்கான காரணத்தை, வனத் துறை தெளிவுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே சாத்தனுார் அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. அணைக்கு அருகே வனத் துறை பராமரிப்பில் முதலை பண்ணை உள்ளது.
கடந்த 1977ம் ஆண்டு துவங்கப்பட்ட முதலை பண்ணையில், 500க்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டன. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், போதுமான உணவுகள் வழங்காததாலும், முதலைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்தாண்டு நிலவரப்படி, 395 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. கடந்த 2ம் தேதி பெய்த கன மழையால், சாத்தனுார் அணையில் உபரி நீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டது.
இதனால், பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 150க்கும் மேற்பட்ட முதலைகள் வெளியேறி விட்டதாக தகவல் வெளியானது. பண்ணையில் இருந்தும் முதலைகள் வெளியேறி உள்ளன. இத்தகவலை, வனத் துறையும், நீர்வளத் துறையும் மறைத்து வருகின்றன.
இந்நிலையில், அணையில் 302 முதலைகள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதாக, வனத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. 93 முதலைகள் மாயமானது உறுதியாகி உள்ளது. இது விவசாயிகள், பொது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
வனத்துறை, முன்பு தெரிவித்து வந்த முதலைகள் எண்ணிக்கைக்கும், தற்போது தெரிவிக்கும் எண்ணிக்கைக்கும் முரண்பாடு உள்ளது. பெண்ணையாற்றில் ஏராளமான முதலைகள் வெளியேறி இருப்பதாக சந்தேகம் எழுகிறது. இதனால், ஆற்றையும், ஏரிகளையும் ஒட்டி இருப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பொது மக்களின் பாதுகாப்பை, அரசு உறுதி செய்ய வேண்டும்.
ஆற்றின் முகத்துவாரம் வரை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். பண்ணையில் 10க்கும் மேற்பட்ட, 'சிசிடிவி கேமரா'க்கள் உள்ளன.
வெள்ள நேரத்தில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலைகள் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணத்தை தெளிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

